நழுவியது மனு பாகர் 'ஹாட்ரிக்' பதக்கம் * துப்பாக்கிசுடுதலில் 'ஷாக்'

பாரிஸ்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 'ஹாட்ரிக்' பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார் மனு பாகர். நேற்று 'ஷூட் ஆப்' முறையில் பின்தங்க, நான்காவது இடம் பிடித்து ஆறுதல் அடைந்தார்.
பிரான்சின் பாரிசில், 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு போட்டி நடந்தன. இதன் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற மனு பாகர், மொத்தம் 590.24 புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார்.
நழுவிய 'ஹாட்ரிக்'
நேற்று பைனல் நடந்தது. ஏற்கனவே 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தனிநபர், கலப்பு அணிகள் பிரிவில் தலா ஒரு வெண்கலம் என இரு பதக்கம் வென்றிருந்தார் மனு பாகர். மீண்டும் அசத்தினால் ஒரே ஒலிம்பிக்கில் 'ஹாட்ரிக்' பதக்கம் வென்று வரலாறு படைக்கலாம் என்ற நிலையில், துவக்கத்தில் சற்று சரிவை சந்தித்தார் மனு பாகர்.
முதலில் 'ஸ்டேஜ்-1'ல் தலா 5 வாய்ப்பு கொண்ட 3 'சீரிஸ்' நடந்தன. முதல் 'சீரிசில்' 2 முறை மட்டும் இலக்கை சுட்ட மனு பாகர், அடுத்த இரு 'சீரிசில்', தலா 4 முறை சுட்டார். இதையடுத்து 10 புள்ளியுடன் மனு பாகர், 6 வது இடம் (மொத்தம் 8) பிடித்தார். பின் 'எலிமினேஷன்' ('ஸ்டேஜ்-2') போட்டி நடந்தது. இதில், தலா 5 வாய்ப்பு கொண்ட 7 'சீரிஸ்' (4 முதல் 10 வரை) நடந்தன.
4, 5, 6, 7 வது சீரிசில், 3, 5, 4, 4 என சிறப்பாக செயல்பட்ட மனு பாகர், ஒரு கட்டத்தில் 1வது, பின் 2வது இடம் என முன்னேறினார். இதனால் தங்கம் அல்லது வெள்ளி வெல்வார் என எதிர்பார்ப்பு எகிறியது. 8வது சீரிசில் 2 முறை மட்டும் இலக்கை சுட, 28 புள்ளியுடன் 3வது இடத்தை ஹங்கேரியின் வெரோனிகாவுடன் பகிர்ந்து கொண்டார்.
இதையடுத்து 3வது இடம் யாருக்கு என்பதை உறுதி செய்ய 'ஷூட் ஆப்' நடந்தது. இதில் இருவருக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன. மனு பாகர் 2, வெரோனிகா 3 என சுட்டனர். இதனால் மனு பாகர் 4வது இடம் பிடித்து சோகத்துடன் வெளியேறினார்.
பறிபோன பதக்கம்
ஒருவேளை மனு பாகர், 3வது இடம் பிடித்து இருந்தால், அடுத்து வெள்ளி, தங்கத்துக்கான கடைசி இரு 'சீரிசில்' பங்கேற்றிருக்கலாம்.
இருப்பினும் சுதந்திர இந்தியாவுக்குப் பின் நடந்த ஒலிம்பிக்கில் ஒரே முறை, இரு பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையுடன் நாடு திரும்ப உள்ளார்.
தென் கொரியாவின் ஜின் யாங் (37), பிரான்சின் கேமில்லே (37), வெரோனிகா (31) முதல் மூன்று இடம் பிடித்து பதக்கம் தட்டிச் சென்றனர்.
பதட்டத்தால் பறிபோனது
மனு பாகர் கூறுகையில்,'' கடைசி நேரத்தில் ஒருவிதமான பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் அமைதியாக இருந்து முடிந்தவரை சிறப்பாக செயல்பட முயற்சித்தேன். ஆனால் பதக்கம் பெற இது போதவில்லை. மற்றபடி இரண்டு பதக்கம் வென்றதால், இந்த ஒலிம்பிக் எனக்கு சிறப்பாக அமைந்தது. அடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,'' என்றார்.
மகேஷ்வரி நம்பிக்கை
பெண்களுக்கான ஸ்கீட் பிரிவில் இந்தியா சார்பில் மகேஷ்வரி, ரைசா பங்கேற்கின்றனர். நேற்று முதல் நாள் தகுதிச்சுற்று நடந்தது. இதில் மகேஷ்வரி (23, 24, 24) 71 புள்ளியுடன் 8வது, ரைசா (21, 22, 23) 66 புள்ளியுடன் 25வது இடத்தில் உள்ளனர். 'டாப்-8' வீராங்கனைகள் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும் என்பதால், இன்று இருவரும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
அனந்த்ஜீத் '24'
ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 'ஸ்கீட்' பிரிவு தகுதிச் சுற்று முதல் நாளில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங், 26 வது இடத்தில் (68 புள்ளி) இருந்தார். நேற்று இரண்டாவது நாள் தகுதிச்சுற்று நடந்தது. இம்முறை மொத்தம் 116 புள்ளி மட்டும் பெற்ற இவர், 24வது இடத்துக்கு தள்ளப்பட்டு, பைனல் வாய்ப்பை இழந்தார்.

Advertisement