டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் இந்தியா

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது.

பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் பெண்கள் அணிகளுக்கான 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியா, ருமேனியா மோதின. இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கமத் ஜோடி 3-0 (11-9, 12-10, 11-7) என ருமேனியாவின் அடியானா, சமாரா ஜோடியை வீழ்த்தியது. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா 3-0 (11-5, 11-7, 11-7) என ருமேனியாவின் பெர்னாடெட் சாக்சை வீழ்த்தினார்.
அடுத்து நடந்த இரு ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் ஸ்ரீஜா (2-3), அர்ச்சனா கமத் (1-3) தோல்வியடைந்தனர். இதனையடுத்து போட்டி 2-2 என சமநிலை வகித்தது. கடைசி ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் மணிகா 3-0 (11-5, 11-9, 11-9) என ருமேனியாவின் அடியானாவை வீழ்த்தினார். முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

தடகளம்: கிரண் 7வது இடம்
பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் இந்தியாவின் கிரண் பஹல் பங்கேற்றார். மொத்தம் 48 பேர், 6 பிரிவுகளாக விளையாடினர். ஐந்தாவது பிரிவில் இடம் பிடித்த கிரண் பஹல், இலக்கை 52.51 வினாடியில் கடந்து 7வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 39வது இடம் பிடித்த இவர், நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெறவில்லை. இன்று நடக்கும் 'ரெப்பிசேஜ்' போட்டியில் சாதிக்கும் பட்சத்தில் அரையிறுதியில் பங்கேற்கலாம்.

Advertisement