துப்பாக்கிசுடுதலில் நழுவிய வெண்கலம் * ஒரு புள்ளியில் பறிபோன பதக்கம்

பாரிஸ்: துப்பாக்கிசுடுதலில் அனன்ஜீத் சிங், மகேஷ்வரி ஜோடி வெண்கல பதக்கத்தை கோட்டை விட்டது.
ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் இந்தியா சார்பில் 21 பேர் பங்கேற்றனர். 3 வெண்கலம் வென்றனர். நேற்று கடைசி போட்டி நடந்தது. ஸ்கீட் கலப்பு பிரிவில் இந்தியாவின் அனன்ஜீத் சிங், மகேஷ்வரி ஜோடி களமிறங்கியது.
தகுதிச்சுற்றில் 'டாப்-4' இடம் பிடித்ததால் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கலாம். இந்நிலையில் இந்திய ஜோடி சிறப்பாக செயல்பட்டது. அனன்ஜீத் சிங் 72, மகேஷ்வரி 74 புள்ளி என மொத்தம் 146 புள்ளி எடுக்க, இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்தது. இதைடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஜோடி, 3வது இடம் பிடித்த வலிமையான சீனாவின் இட்டிங், ஜியான்லின் ஜோடியை சந்தித்தது.
இதில் இருவருக்கும் தலா 48 வாய்ப்புகள் தரப்பட்டன. முதல் 24 வாய்ப்பில் இந்தியா 20, சீனா 20 புள்ளி எடுத்தன. அடுத்த 24 வாய்ப்பில் இந்தியா 23, சீனா 24 புள்ளி எடுத்தன. முடிவில் இந்திய ஜோடி 43-44 என, 1 புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கத்தை இழந்தது.

Advertisement