இந்தியாவின் பதக்கம் உயருமா * பாரிஸ் ஒலிம்பிக்கில்...

பாரிஸ்: ஒலிம்பிக் முடிய இன்னும் 5 நாள் மட்டும் உள்ள நிலையில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இரட்டை இலக்கை எட்டுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 65 வீரர், 45 வீராங்கனை என மொத்தம் 110 பேர், 16 போட்டிகளில் களமிறங்கி உள்ளனர். இதுவரை நடந்த போட்டி முடிவில் இந்தியாவுக்கு துப்பாக்கிசுடுதலில் மட்டும் 3 பதக்கம் கிடைத்தன. தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்ற மனு பாகர், கலப்பு இரட்டையரில் சரப்ஜோத் சிங்குடன் சேர்ந்து மற்றொரு வெண்கலம் வென்றார். ஸ்வப்னில் தன் பங்கிற்கு ஒரு வெண்கலம் கைப்பற்றினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாட்மின்டன் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஒற்றையரில் சிந்து காலிறுதியில் தோற்றனர். வில்வித்தையிலும் தீபிகா குமாரி ஏமாற்றினார். குத்துச்சண்டையில் அமித் பங்கல் கைவிட, லவ்லினா, நிஷாந்த் தேவ் காலிறுதியில் வீழ்ந்தனர்.
டென்னிசில் போபண்ணா-ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, சுமித் நாகல் முதல் சுற்றுடன் திரும்பினர். நேற்று வரை 62 நட்சத்திரங்கள் பங்களிப்பு முடிந்தது. அடுத்து டேபிள் டென்னிஸ் (6) அணிகளுக்கான போட்டி மட்டும் மீதமுள்ளது.
தவிர மல்யுத்தத்தில் வினேஷ் போகத் உட்பட 5 பேர், பளுதுாக்குதலில் மீராபாய் சானு (நாளை) போட்டியிட உள்ளனர். ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதியில் மோத உள்ளது. தடகளத்தில் நீரஜ் சோப்ரா உட்பட 18 பேர் மீதம் இருப்பதால், பதக்க எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

நழுவிய பதக்கங்கள்
பாரிசில் இந்திய நட்சத்திரங்கள் 5 போட்டியில், 4 வது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை கோட்டை விட்டனர்.
* துப்பாக்கிசுடுதலில் மனுபாகர் (25 மீ., பிஸ்டல்), அர்ஜுன் (10 மீ., ஏர் ரைபிள்) 4வது இடம் பிடித்தனர்.
* வில்வித்தையில் திராஜ், அன்கிதா ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வீழ்ந்தது.
* லக்சயா சென் ஒற்றையர் பாட்மின்டனில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோற்றார்.
* துப்பாக்கிசுடுதல் இரட்டையரில் மகேஷ்வரி, அனன்ஜீத் சிங் ஜோடி, 1 புள்ளி வித்தியாசத்தில் வெண்கலத்தை இழந்தது.

Advertisement