ஹாக்கி: இந்திய அணிக்கு 'ஷாக்' * ஜெர்மனியிடம் போராடி தோல்வி

பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி, 2-3 என ஜெர்மனியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
ஒலிம்பிக் ஹாக்கியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதலில் போட்டிகள் லீக் முறையில் நடந்தன. இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி என நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் உலகத்தரவரிசையில் 'நம்பர்-7' இடத்திலுள்ள இந்திய அணி, 'நம்பர்-5' ஆக உள்ள ஜெர்மனியை எதிர்கொண்டது.
போட்டியின் துவக்கத்தில் இந்தியாவுக்கு 5 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்த போதும், கோலாக மாற்ற முடியவில்லை. போட்டியின் 7 வது நிமிடத்தில் மீண்டும் 'பெனால்டி கார்னர்' கிடைத்தது. இம்முறை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், துல்லியமாக அடித்து கோலாக மாற்றினார். இத்தொடரில் இவர் அடித்த 8வது கோல் இது.
18 வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கொன்சாலோ ஒரு கோல் அடித்தார். 20 வது நிமிடம் அபிஷேக் அடித்த கோல் வாய்ப்பு, போஸ்டுக்கு வெளியே சென்று, நழுவியது. போட்டியின் 27 வது நிமிடம் ஜெர்மனிக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' கிடைத்தது. இதில் கிறிஸ்டோபர் கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 1-2 என பின்தங்கியது.
இரண்டாவது பாதி துவங்கியதும் அடுத்தடுத்து கிடைத்த இரண்டு 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளையும், இந்திய வீரர்கள் வீணடித்தனர். 36 வது நிமிடம் மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. இம்முறை சுக்ஜீத் சிங் கோலாக மாற்றினார். ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. போட்டியின் 54 வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மார்கோ ஒரு கோல் அடித்தார். ஷாம்ஷெர் ஏமாற்றம்
இதை சமன் செய்ய, கடைசி 2 நிமிடம் இருந்த போது, கோல் கீப்பர் ஸ்ரீஜேஷிற்குப் பதில், மாற்று வீரர் ஷாம்ஷெர் களமிறங்கி போராடினார். கடைசி வினாடியில் போஸ்டுக்கு அருகில் கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை ஷாம்ஷெர் வீணடித்தார். முடிவில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

வெண்கலம் வாய்ப்பு

அரையிறுதியில் தோற்ற இந்திய அணி, நாளை ஸ்பெயினுடன் (மாலை 5:30 மணி) மோத உள்ளது. இதில் வென்றால் மீண்டும் வெண்கலப் பதக்கம் வென்று திரும்பலாம்.

பைனலில் நெதர்லாந்து
ஒலிம்பிக் ஹாக்கியில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகள் மோதின. ஏற்கனவே நடந்த லீக் போட்டியில் 5-3 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியதால், நெதர்லாந்து வீரர்கள் உற்சாகமாக களமிறங்கினர். எதிர்பார்த்தது போல போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினர்.
12 வது நிமிடம் ஜான்ஸ்சென் ஒரு கோல் அடித்தார். 20 வது நிமிடம் பிரிங்க்மென் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் நெதர்லாந்து அணிக்கு வாம் டேம் (32வது நிமிடம்), டெல்கென்கேம்ப் (50வது) தலா ஒரு கோல் அடித்தனர். ஸ்பெயின் தரப்பில் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் நெதர்லாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

Advertisement