ஜெர்மனியிடம் வீழ்ந்தது இந்தியா: ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் காலிறுதியில்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் காலிறுதியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 1-3 என ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.

பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதின. இதன் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கமத் ஜோடி 1-3 (5-11, 11-8, 10-12, 6-11) என ஜெர்மனியின் யுவான் வான், ஷான் ஜியானோ ஜோடியிடம் தோல்வியடைந்தது.

ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா 1-3 (11-8, 5-11, 7-11, 5-11) என ஜெர்மனியின் அன்னெட் கவுப்மானிடம் தோல்வியடைந்தார். இரண்டாவது போட்டியில் இந்தியாவின் அர்ச்சனா கமத் 3-1 (19-17, 1-11, 11-5, 11-9) என ஜெர்மனியின் ஷான் ஜியானோவை வீழ்த்தினார். மூன்றாவது போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா 0-3 (6-11, 7-11, 7-11) என அன்னெட் கவுப்மானிடம் வீழ்ந்தார்.
முடிவில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை.

Advertisement