ஹாக்கி: வெண்கலம் வெல்லுமா இந்தியா * இன்று ஸ்பெயின் அணியுடன் மோதல்

பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, இன்று ஸ்பெயினை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஒலிம்பிக் ஹாக்கியில் 12 அணிகள் பங்கேற்றன. இதுவரை நடந்த போட்டி முடிவில் 5 முதல் 8 வரையிலான இடத்தை பெல்ஜியம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா பெற்றன. தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து அணிகள் 9 முதல் 12 வரையிலான இடம் பிடித்தன.
ஜெர்மனி-நெதர்லாந்து அணிகள் பைனலுக்கு முன்னேறின. இந்திய அணியை பொறுத்தவரையில் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டது, லீக் சுற்றில் 3 வெற்றி, தலா ஒரு 'டிரா', தோல்வியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது. இதில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
அடுத்து நடந்த அரையிறுதியில் ஜெர்மனிக்கு எதிராக துணிச்சலாக போராடியது. ஜர்மன்பிரீத் சிங் செய்த தவறு காரணமாக, கடைசி 6 நிமிடத்தில் பின்தங்க, போட்டியில் தோற்க நேரிட்டது. 44 ஆண்டுக்குப் பின் பைனல் செல்லும் வாய்ப்பு நழுவியது.
மீள முடியுமா
இன்று மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி (நம்பர்-5), மற்றொரு அரையிறுதியில் தோல்வியடைந்த ஸ்பெயினை (நம்பர்-7) சந்திக்கிறது. அரையிறுதியில் 10 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்த போதும், 2ல் மட்டுமே கோல் அடித்தனர்.
கேப்டன் ஹர்மன்பீரித் சிங்கை மட்டும் அதிகம் நம்புவது, புதிய திட்டங்கள் இல்லாதது போன்ற காரணத்தால் பல வாய்ப்புகளை வீணடித்தனர்.
காலிறுதியில் 'ரெட் கார்டு' பெற்ற அமித் ரோஹிதாஸ், தடையில் இருந்து மீண்டு இன்று களமிறங்குவது இந்தியாவுக்கு பலம். 'சீனியர்' கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தனது கடைசி போட்டியில் பங்கேற்கிறார். இந்தியா இன்று சாதிக்கும் பட்சத்தில் வெண்கல பதக்கம் கைப்பற்றி, அவருக்கு சிறப்பாக விடை கொடுக்கலாம்.
ஸ்பெயின் சவால்
ஸ்பெயின் அணி அரையிறுதியில் 0-4 என நெதர்லாந்திடம் தோற்ற சோகத்தில் உள்ளது. தவிர 1980 ஒலிம்பிக் பைனலில் இந்தியாவிடம் வீழ்ந்துள்ளது. ஒலிம்பிக் அரங்கில் ஸ்பெயினுக்கு எதிராக மோதிய 10 போட்டியில் இந்தியா 7ல் வென்றுள்ளது (2 'டிரா', 1 தோல்வி).
இந்த அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 5 போட்டியில் இந்தியா 4ல் வென்றது. இது தொடரும் பட்சத்தில் இந்தியா மீண்டும் வெண்கலம் வென்று நாடு திரும்பலாம்.

Advertisement