மல்யுத்தம்... 'மாமன்னன்' அமன் * வெண்கலம் வென்று அசத்தல் * இந்தியாவுக்கு ஆறாவது பதக்கம்

பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத், வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இது பாரிசில் இந்தியா வென்ற ஆறாவது பதக்கமாக அமைந்தது. நேற்று நடந்த போட்டியில் போர்டோரிகோ வீரர் டேரியனை 13-5 என வீழ்த்தினார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டிகள் நடக்கின்றன. இந்தியா சார்பில் களமிறங்கிய நிஷா, அன்டிம், அன்ஷு என யாரும் பதக்கம் வெல்லவில்லை. வினேஷ் போகத் பைனலுக்கு முன்னேறிய போதும், 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆண்களுக்கான 57 கிலோ பிரிவு 'பிரீஸ்டைல்' போட்டியில், இந்தியா சார்பில் அமன் ஷெராவத் 21, களமிறங்கினார்.
23 வயதுகுட்பட்ட பிரிவில் உலக சாம்பியன் ஆன இவர், இந்திய அளவில் நடந்த தகுதிச்சுற்றில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவிக்குமாரை வீழ்த்தி இருந்தார். இதனால் பாரிஸ் ஒலிம்பிக்கில் இவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.
முதல் இரு போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இவர், அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் ஜப்பான் வீரர் ரெய் ஹிகுச்சியிடம் தோல்வியடைந்தார்.
வெண்கல வாய்ப்பு
இதையடுத்து நேற்று வெண்கலப் பதக்கத்துக்கான 'ரெப்பிசாஜ்' போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அமன் ஷெராவத், போர்டோரிகோ வீரர் டேரியன் டாய் குரூசை எதிர்கொண்டார்.
தலா 3 நிமிடம் கொண்ட 2 'பிரீயடாக' போட்டி நடந்தது. துவக்கத்தில் டேரியன் ஒரு புள்ளி எடுத்தார். பின் சுதாரித்துக் கொண்ட அமன், அடுத்தடுத்து புள்ளி எடுக்க, முதல் 'பீரியடு' முடிவில் அமன் 6-3 என முன்னிலை பெற்றார்.
இரண்டாவது 'பீரியடு' துவக்கத்தில் 2 புள்ளி எடுத்த டேரியன், 5-6 என அமனை நெருங்கினார். அடுத்து சுதாரித்துக் கொண்ட அமன், 2, 2, 2, 1 என வரிசையாக புள்ளி எடுத்தார். முடிவில் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

ஒரே வீரர்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 5 வீராங்கனைகள், ஒரு வீரர் என 6 பேர் பங்கேற்றனர். வீராங்கனைகள் ஏமாற்றிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட ஒரே வீரர் அமன் ஷெராவத், பதக்கம் வென்று அசத்தினார்.

7வது இந்தியர்
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற 7வது இந்தியர் ஆனார் அமன் ஷெராவத். முன்னதாக கே.டி.ஜாதவ் (1952, வெண்கலம்), சுஷில் குமார் (2008ல் வெண்கலம், 2012ல் வெள்ளி), யோகேஷ்வர் தத் (2012, வெண்கலம்), சாக் ஷி மாலிக் (2016, வெண்கலம்), ரவிக்குமார் (2021, வெள்ளி), பஜ்ரங் புனியா (2021, வெண்கலம்) பதக்கம் வென்றிருந்தனர்.

எட்டாவது பதக்கம்
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் 2008 முதல் தொடர்ந்து இந்தியா பதக்கம் வென்று வருகிறது. இதுவரை, 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கம் கைப்பற்றியது.

ரசிகர்களுக்கு உற்சாகம்
மல்யுத்தம் 50 கிலோ பிரிவில் பைனலுக்கு முன்னேறிய வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். தற்போது அமன் ஷெராவத் வென்ற பதக்கம், இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

Advertisement