கான்கிரீட் கட்டுமானங்களில் சீரான வடிவம் கிடைக்க உதவும் 'டெக்கோபார்ம்!'

வீடு கட்டும் போது அதில் ஒவ்வொரு பாகத்தின் வெளிப்புற தோற்றம் எப்படிஇருக்க வேண்டும் என்பதை ஆரம்ப நிலையிலேயே முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக, கட்டடத்தின் துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றுக்கான பணியில் அதன் உட்புற விஷயத்தில் தான் கவனம் செலுத்துகிறோம்.

இந்த வகை கட்டுமானங்களை ஏற்படுத்த கம்பிகளை உள்ளீடாக வைத்து, அதை சுற்றி பலகைகளை பயன்படுத்தி தடுப்புகள் ஏற்படுத்தப்படும். இதற்கு உட்பட்ட இடைவெளியில் தான் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டு உரிய வடிவத்தில் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்படும்.

இந்நிலையில், கான்கிரீட் கலவை இறுகுவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்த பின், அதை பிரித்த பின் கட்டுமானத்தின் வெளிப்புற தோற்றம் தெரியும். அப்போது அதை சீர்படுத்தி, அடுத்த கட்டமாக பூச்சு வேலை மேற்கொள்வது பொதுவான வழக்கமாக உள்ளது.

ஆனால், இவ்வாறு கான்கிரீட் இறுக்கம் அடையும் நிலையில், தடுப்பு பலகைகளை பிரிக்கும் போது அதன் வெளிப்புறத்தில் பல்வேறு பிரச்னகள் வருகின்றன. குறிப்பாக, துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றில் தடுப்பு பலகைகள் பிரிக்கும் நிலையில் சில வெளிப்புற தோற்றம் நாம் விரும்பிய வடிவத்தில் இருக்காது.

துாண்கள், பீம்களின் வெளிப்புறம், நாம் விரும்பிய வடிவத்தில் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். குறிப்பாக, துாண்கள், பீம்களில் வெளிப்புறத்தில் குறிப்பிட்ட சில வடிவமைப்புகள் வர வேண்டும் என்றால், அதை பூச்சு வேலையின் போது தான் செய்ய முடியும் என்ற நிலை தற்போது உள்ளது.

கான்கிரீட் போடும் நிலையிலேயே இந்த வடிவமைப்புகள் வந்தால், அது கூடுதல் உறுதி தன்மையுடன் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு உதவும் வகையில், தற்போது டெக்கோபார்ம் என்ற லைனர்கள் தற்போது பரவலாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றின் வெளிப்புறத்தில் என்ன வடிவம் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தாலும் அதை பூர்த்தி செய்யும் வகையில் இது பயன்படும். கம்பி கட்டும் வேலை முடிந்த நிலையில், கான்கிரீட் கலவை கொட்டுவதற்கான தடுப்புகள் அமைக்கும் போது இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். தடுப்பு பலகைகள் அமைக்கும் முன், டெக்கோபார்ம் லைனர்களை பயன்படுத்தினால், வெளிப்புற வடிவத்துக்கான அச்சுகளாக இது செயல்படும். குறிப்பாக வெளிப்புற வடிவங்களும் கான்கிரீட்டால் உருவாகும் நிலையில், அதில் லேசான பூச்சு வேலை மற்றும் வண்ணம் அடித்தால் போதும் என்பதால் மக்கள் இதை விரும்புகின்றனர்.

உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியின் போது இது போன்ற புதிய வகை பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தால், அதற்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் இருக்க வேண்டும். குறிப்பாக இந்த பொருட்கள் குறித்த அடிப்படை கூட தெரியாத நபர்களை வைத்து இதை செய்ய முற்பட்டால், தவறான விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

Advertisement