சாட்சிகளை கலைக்க மாட்டாரா; அமைச்சராகும் செந்தில் பாலாஜி பற்றி அடுக்கடுக்காக ராமதாஸ் கேள்வி!

4

சென்னை: 'சிறையில் துறை இல்லாத அமைச்சராக இருந்தபோதே சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்று அஞ்சப்பட்ட செந்தில் பாலாஜி, இப்போது பிணையில் வெளிவந்து அமைச்சராக அதிகாரம் செலுத்தும் போது சாட்சிகளை கலைக்க மாட்டாரா' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து சமூகவலைதளத்தில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அமைச்சரே மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் புதல்வர் உதயநிதி துணை முதல்வர் ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக செந்தில் பாலாஜி, செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக்கப்பட்டு உள்ளனர். புதிய வாய்ப்பு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



அநீதி




பட்டியலினத்தவருக்கு தி.மு.க., தொடர்ந்து சமூக அநீதியையே இழைத்து வருகிறது. தி.மு.க.,வில் பட்டியலின, பழங்குடியின சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 21. பட்டிலயினத்தவர் அமைச்சர்களாக்கப்பட்டாலும் கூட, அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத துறைகள் மட்டுமங ஒதுக்கப்படுகின்றன.


அமைச்சரவையில் ஒருவரை சேர்ப்பதும், நீக்குவதும் முதல்வரின் விருப்புரிமை என்றாலும் கூட, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களாக மக்களுக்கு உரிமை உண்டு.


விளக்கம் அளியுங்கள்!




தமக்கு நாற்காலி வழங்காத கட்சிக்காரரை அடிப்பதற்காக கல்லை எடுத்துக்கொண்டு ஓடியது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கியதற்காக கடந்த ஆண்டு மே மாதம் அமடச்சர் பதவியில் இருந்து நாசர் நீக்கப்பட்டார்.

ஓராண்டுக்கு முன் தண்டிக்கப்பட்ட அவர், இப்போது எந்த அடிப்படையில் அமை ச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சராக்குவதற்கு சட்டப்படியாக எந்த தடையும் இல்லை; ஆனால், அவருக்கு தார்மீகத் தகுதி இல்லை.


சாட்சிகளை கலைக்க மாட்டாரா?




அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் இருந்த போதும், துறை இல்லாத அமைச்சராகவே செந்தில் பாலாஜி நீடித்தார். அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதைக் காரணம் காட்டித் தான் அவருக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வந்தது.

அதைத் தொடர்ந்து தான் அவர் பதவியிலிருந்து விலகினார். சிறையிலிருந்து பிணையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு மீண்டும் அவர் அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார். சிறையில் துறை இல்லாத அமைச்சராக இருந்த போதே சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்று அஞ்சப்பட்ட செந்தில் பாலாஜி, இப்போது பிணையில் வெளிவந்து அமைச்சராக அதிகாரம் செலுத்தும் போது சாட்சிகளை கலைக்க மாட்டாரா?


சமூகநீதியா?




முதல்வரால் தியாகி என்று போற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு எதிரான வழக்குகளில் சாட்சிகளை கலைப்பது உள்ளிட்ட சட்டத்தை வளைக்கும் செயல்களில் ஈடுபடுகிறாரா? என்பதை நீதிமன்றங்களும், விசாரணை அமைப்புகளும் கண்காணிக்க வேண்டும். அமைச்சரவையில் சமூகநீதியா?

தி.மு.க.வின் நாடகம் எடுபடாது. தியாகியால் நீதி வளைக்கப்படக் கூடாது. அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அதை உரிய நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement