மாநகராட்சியாகும் ஊட்டி; தயார் நிலையில் முன்மொழிவு; 510 உள்ளாட்சிகள் இணைப்பு!

2

சென்னை: தமிழகத்தில் புதிய மாநகராட்சியாக ஊட்டி மாநகராட்சி உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் 510 உள்ளாட்சி அமைப்புகள், அருகேயுள்ள நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சியுடன் இணைத்து விரிவாக்கம் செய்ய அரசுக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதை முன்னிட்டு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. ஏற்கனவே இருக்கும் மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 236 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. ஏற்கனவே இருக்கும் நகராட்சிகளுடன் 13 பேரூராட்சிகள், 196 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. புதிதாக தோற்றுவிக்கப்படும் நகராட்சிகளுடன் 24 பேரூராட்சிகள், 24 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன.


புதிதாக தோற்றுவிக்கப்படும் ஊட்டி மாநகராட்சியில், ஊட்டி நகராட்சி, கேத்தி பேரூராட்சி, தொட்டபெட்டா, நஞ்சநாடு, இத்தலார், உல்லத்தி ஆகிய 4 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. மொத்தம், 5 நகராட்சிகள், 45 பேரூராட்சிகள், 460 ஊராட்சிகள், அருகேயுள்ள உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட உள்ளன. ஸ்ரீபெரும்புதுார், மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், அவினாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு, போளூர், செங்கம், சேத்துப்பட்டு, அன்னுார், சூலுார், வேலுார், மோகனுார், வடக்கு வள்ளியூர், மண்ணச்சநல்லுார், அரூர், கள்ளக்குறிச்சி, திருவட்டாறு, குலசேகரம், உத்தமபாளையம்,


இளையான்குடி ஆகியவை புதிய நகராட்சிகளாக உருவாக்கப்பட உள்ளன.
கோவை மாநகராட்சியுடன் மதுக்கரை நகராட்சி, இருகூர், பேரூர், பள்ளபாளையம், வெள்ளலுார் பேரூராட்சிகள், குருடம்பாளையம், சோமையம்பாளையம், பேரூர் செட்டிபாளையம், கீரணத்தம், நீலம்பூர், மயிலம்பட்டி, பட்டனம், வெள்ளானைப்பட்டி, கள்ளிபாளையம், சீரபாளையம் ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன.


இதற்கான முன்மொழிவு அதிகாரிகளால் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அரசு அதை ஏற்று, அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement