இந்திய கலாச்சாரத்தை காட்டும் 'பேலஸ் ஆன் வீல்ஸ்' சொகுசு ரயில்

உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய சொகுசு ரயில்களில் ஒன்று 'பேலஸ் ஆன் வீல்ஸ்'. இந்தியாவின் கலாச்சார துாதராக விளங்கும் இந்த ரயில் நாட்டின் முதல் பாரம்பரிய சொகுசு ரயில். தற்போது இந்த ரயிலின் தோற்றமும், உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கட்டட வடிவமைப்பாளர்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

டில்லியின் சப்தர்ஜங் நிலையத்திலிருந்து ராஜஸ்தானுக்கு இந்த ஆண்டுக்கான முதல் பயணம் துவக்கப்பட்டது. முதல் பயணத்தில் 32 பயணிகள் கலந்து கொண்டனர். அதில் 20 பேர் வெளிநாட்டினர். விருந்தினர்களை டில்லி விமான நிலையத்திலிருந்து பஸ்களில் அழைத்துவந்து, நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைத்து பின்னர் ரயில் புறப்படும் இடத்திற்கு அழைத்து வருகின்றனர். சிவப்பு கம்பள வரவேற்பு செய்து நெற்றி திலகமிட்டு, மாலை மரியாதை செய்யப்பட்டு ராஜஸ்தான் கலாச்சாரப்படி கவுரவிக்கபடுகின்றனர்.

பின்னர் ரயிலுக்குள் உள்ள வரவேற்பு அறைக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு வரவேற்பு பானம் வழங்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரண்மனை அறைகளில் தங்க வைக்கப்படுகின்றனர். ரயிலின் உள்ளே அறையின் தோற்றம் ஒரு அரண்மனையில் தங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளன, டைனிங் ஹால், குளியலறை வசதி அறைக்குள் அமைக்கப்பட்டுள்ளன.

தங்கும் அறைக்கு வலது, இடது புறத்தில் வரவேற்பு அறை, தர்பார் ஹால், உணவகம் பார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறைக்கும் மூன்று உதவியாளர்கள் இருப்பர். காலிங் பெல் வசதி செய்யப்பட்டு, அவர்களை மாளிகைக்குள் அழைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது, ஒரு அறை (கேபின்க்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 12 லட்சம், அதிகபட்சம் ரூ. 39 லட்சம். இந்த சொகுசு ரயில் 7 நாட்களில் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானின் எட்டு நகரங்களுக்கு செல்கிறது. ஜெய்ப்பூர், சவாய் மாதோபூர், சித்தோர்கர், உதய்பூர், ஜெய்சல்மேர், ஜோத்பூர், பாரத்பூர், ஆக்ரா சென்று டில்லி வந்து பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

இந்த பாரம்பரிய ரயிலின் மூலம் இந்திய கலாச்சாரம், பண்பாட்டை கண்ட உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பரவசமடைந்தனர்.

Advertisement