பையனை கடத்திட்டோம், ரூ.25 லட்சம் கொடு! கடத்தல் நாடகமாடி மாட்டிக்கிட்ட 'கிரிமினல்' மகன்

2

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கடன் தொல்லையை தீர்க்க நண்பனுடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடி 25 லட்சம் ரூபாய் கேட்ட மகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.




படங்களில் கடத்தல்





சினிமாவில் அப்பாவின் காசை ஆட்டைய போட மகனே கடத்தல் நாடகமாடும் காட்சிகள் பார்த்திருப்போம். சில படங்களில் செலவுக்கு காசில்லை, அப்பா சிக்கன பேர்வழியாக இருக்கிறார் என்பதற்காக ஆண் வேஷம் போட்டு அப்பாக்களை மிரட்டிய கதாநாயகிகளும் உண்டு.


கடன் தொல்லை





இந்த காட்சிகள் காமெடிக்காகத் தான் என்ற போதிலும், கடன் தொல்லையை தீர்க்க நண்பருடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடி 25 லட்சம் ரூபாய் பிணயத்தொகை கேட்டு மிரட்டிய மகன் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


வீடியோ





இது குறித்து போலீசார் கூறி உள்ளதாவது; உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோஹா பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப். இவருக்கு நாஜிம் என்ற மகன் உள்ளார். இந் நிலையில் நாஜிம் சகோதரர் நசீமுக்கு மர்ம நபர்கள் ஒரு வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் நசீம் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்டு கிடப்பது போன்று காட்சிகள் இருந்துள்ளன.


ரூ.25 லட்சம்





இந்த விவரம் அறிந்த நாஜிம் தந்தை ஆரிப் பதற, அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் மகனை விடுவிக்க ரூ.25 லட்சம் தருமாறு மிரட்டி உள்ளார். பிணயத்தொகையை தராவிட்டால் மகனை கொன்று விடுவோம் என்றும் பயமுறுத்தி இருக்கிறார்.


விசாரணை





என்ன செய்வது என்று தெரியாமல் உதறல் எடுத்த தந்தை ஆரிப், நேராக போலீசின் உதவியை நாடி இருக்கிறார்.வழக்கு பதிவு செய்த போலீசார், நாஜிம் பற்றிய தகவல்களை திரட்டி, அவர் எங்கு இருக்கிறார் என்று தேட ஆரம்பித்தனர். விசாரணை, தேடுதல் வேட்டை ஒரு பக்கம் இருக்க, கடத்தல் வீடியோவுடன் ரூ.25 லட்சம் தருமாறு நாஜிம் தமது மைத்துனருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.


நாடகம்






எங்கோ, எதிலோ தப்பு இருக்கிறதே என்று சந்தேகம் அடைந்த போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து விசாரணையை பல்வேறு கோணங்களில் விரிவாக்கினர். அவர்கள் நினைத்தபடியே நாஜிம் கடத்தப்படவில்லை, கடத்தல் நாடகம் அரங்கேறி இருப்பதை கண்டுபிடித்தனர். நஜிபாபாத் பகுதியில் இருந்த நாஜிம்மை மீட்ட போலீசார், அவரது நண்பர் அமித்தை கைது செய்தனர்.


சிறையில் அடைப்பு






தொடர் விசாரணையில் நாஜிம்முக்கு ஏகப்பட்ட கடன்கள் இருப்பதால் தந்தை வைத்துள்ள ஏராளமான பணத்தை கறக்க நண்பர் உதவியுடன் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது. நாஜிம், அமித் இருவரையும் கைது செய்த போலீசார், பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பணத்துக்காக பெற்ற தந்தையிடம் கடத்தல் நாடகமாடிய இந்த வழக்கில் போலீசார் 8 மணி நேரத்தில் உண்மையை கண்டுபிடித்தனர்.

Advertisement