கண்டித்ததால் ஆத்திரம்; காரை ஏற்றி இளம் போலீஸ்காரர் கொலை; 2 பேருக்கு வலைவீச்சு

புதுடில்லி: டில்லியில் சாலையில் அதிவேகமாக சென்றதைக் கண்டித்த போலீஸ்காரரை, கார் ஏற்றிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தலைநகர் டில்லியில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் சந்தீப்,30. இளம் போலீசாரான இவர், இரவு சாதாரண உடையில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் சென்ற சாலையில் இடதுபுறம் திரும்ப முயன்ற போது, அதிவேகமாக கார் ஒன்று வந்துள்ளது.


இதனைக் கண்ட உஷாரான போலீஸ்காரர் சந்தீப், காரை மெதுவாக ஓட்டுமாறு சொல்லியுள்ளார். இதனால், கடுப்பான நபர்கள், காரை வேகமாக ஓட்டிச் சென்று, சந்தீப்பின் பைக்கின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியுள்ளனர். இதில், 10 மீட்டர் தொலைவுக்கு சந்தீப் காரோடு இழுத்துச் செல்லப்பட்டார்.


பின்னர், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளித்துவிட்டு, பிறகு, மேல்சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் போலீஸ்காரர் உயிரிழந்ததாக அறிவித்தனர்.


தொடர்ந்து, அங்குள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய காரை அடையாளம் கண்டு, பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாகிய 2 பேரை தேடி வருகின்றனர்.


டில்லியில் கடந்த ஜூலை மாதம் இதேபோன்று சாலையில் ஏற்பட்ட மோதலில், இரு குழந்தைகளுடன் பைக்கில் சென்ற தம்பதி மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பெண் உயிரிழந்தார்.

Advertisement