கோப்பை வென்றது இலங்கை: நியூசிலாந்து இன்னிங்ஸ் தோல்வி

காலே: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அசத்திய இலங்கை அணி இன்னிங்ஸ், 154 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

இலங்கை சென்ற நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 602/5 ('டிக்ளேர்'), நியூசிலாந்து 88/10 ரன் எடுத்தன. 'பாலோ-ஆன்' பெற்ற நியூசிலாந்து அணி, 3ம் நாள் முடிவில் 199/5 ரன் எடுத்திருந்தது. பிளன்டெல் (47), பிலிப்ஸ் (32) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டத்தில் அரைசதம் கடந்த டாம் பிளன்டெல் (60), பிலிப்ஸ் (78), சான்ட்னர் (67), நிஷான் பெரிஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். பிரபாத் ஜெயசூர்யா 'சுழலில்' கேப்டன் டிம் சவுத்தீ (10), அசாஜ் படேல் (22) போல்டாகினர். நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 360 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் நிஷான் பெரிஸ் 6, பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை இலங்கையின் கமிந்து மெண்டிஸ் வென்றார். தொடர் நாயகன் விருதை இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா கைப்பற்றினார்.

6 வெற்றி
நடப்பு ஆண்டில் இலங்கை அணி 6 டெஸ்டில் வெற்றி (8 போட்டி, 2 தோல்வி) பெற்றது. இதன்மூலம் ஒரு சீசனில், 2வது முறையாக 6 டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் 2006ல் 11 டெஸ்டில், 6ல் வென்றது. கடந்த 2001ல் விளையாடிய 13 டெஸ்டில், 8ல் வென்றது இலங்கையின் சிறந்த செயல்பாடாக உள்ளது.

* காலே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 6 டெஸ்டிலும் இலங்கை அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.

16 ஆண்டுகளுக்கு பின்...
டெஸ்ட் அரங்கில் நியூசிலாந்துக்கு எதிராக 16 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. கடைசியாக 1998ல் நடந்த காலே டெஸ்டில் இலங்கை அணி இன்னிங்ஸ், 16 ரன்னில் வெற்றி பெற்றிருந்தது.

'நம்பர்-3'
தொடரை 2-0 என முழுமையாக வென்ற இலங்கை அணி, ஐ.சி.சி., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2024-25) புள்ளிப்பட்டியலில், 55.56 வெற்றி சதவீதத்துடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து அணி (37.50 வெற்றி சதவீதம்) 4வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது. முதலிரண்டு இடங்களில் இந்தியா (71.67%), ஆஸ்திரேலியா (62.50) அணிகள் நீடிக்கின்றன.

Advertisement