கோப்பை வென்றது ஆஸ்திரேலியா: இங்கிலாந்து அணி ஏமாற்றம்

பிரிஸ்டோல்: ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 49 ரன் வித்தியாசத்தில் ('டக்வொர்த் லீவிஸ்') வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 3-2 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. இங்கிலாந்து அணி ஏமாற்றம் அடைந்தது.

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் தொடர் 2-2 என சமநிலையில் இருந்தது. பிரிஸ்டோலில் 5வது, கடைசி போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா 'பீல்டிங்' தேர்வு செய்தது.
டக்கெட் அபாரம்: இங்கிலாந்த அணிக்கு பில் சால்ட் (45) நல்ல துவக்கம் கொடுத்தார். வில் ஜாக்ஸ் (0), ஜேமி ஸ்மித் (6), லியாம் லிவிங்ஸ்டன் (0) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய பென் டக்கெட் (107) சதம் விளாசினார். கேப்டன் ஹாரி புரூக் (72) அரைசதம் கடந்தார். அடில் ரஷித் (36) ஓரளவு கைகொடுத்தார். இங்கிலாந்து அணி 49.2 ஓவரில் 309 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட் சாய்த்தார்.


ஷார்ட் விளாசல்: சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு மாத்யூ ஷார்ட் (58), டிராவிஸ் ஹெட் (31) நல்ல துவக்கம் கொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 20.4 ஓவரில் 165/2 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (36), ஜோஷ் இங்லிஸ் (28) அவுட்டாகாமல் இருந்தனர்.

மழை நீடித்ததால் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. வெற்றிக்கு 20.4 ஓவரில் 117 ரன் கணக்கிடப்பட்டது. ஆஸ்திரேலியா 165 ரன் எடுத்திருந்ததால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தட்டிச் சென்றார்.


கோலி சாதனை முறியடிப்பு


இங்கிலாந்தின் ஹாரி புரூக், 5 போட்டியில், ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 312 ரன் குவித்தார். இதன்மூலம் இரு அணிகள் மட்டும் பங்கேற்கும் ஒருநாள் தொடரில் ('பைலேட்ரல் சீரிஸ்') ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன் குவித்த கேப்டன் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களில் இந்தியாவின் கோலி (310 ரன், 2019), தோனி (285 ரன், 2009) உள்ளனர்.

Advertisement