'டிரா' நோக்கி கான்பூர் டெஸ்ட்

கான்பூர்: இந்தியா, வங்கதேசம் மோதும் கான்பூர் டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டம், ஈரமான மைதானம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி உ.பி.,யில் உள்ள கான்பூர், கிரீன்பார்க் மைதானத்தில் நடக்கிறது.
வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்திருந்தது. 35 ஓவர்கள் மட்டும் வீசப்பட்ட நிலையில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்தானது. மோமினுல் ஹக் (40), முஷ்பிகுர் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
தொடர்ந்து மழை நீடித்ததால், ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முழுவதும் ரத்தானது.
மீண்டும் ரத்து
நேற்று காலையில் மழை பெய்யவில்லை. மதியம் 2:00 மணிக்கு வானம் தெளிவாக காணப்பட்டது. ஆடுகளம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் நன்றாக இருந்தன. எனினும் எல்லைப் பகுதியில் நீர் தேங்கியதால் சகதியாக காணப்பட்டது.
இதைச் சரி செய்ய முயற்சித்த போதும் பலன் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாத நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தையும் ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர்.
இன்று கான்பூரில், வானம் பெரும்பாலும் மேகமூட்டமாக காணப்படும். மழை வருவதற்கு 24 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது. இதனால் இன்று போட்டி முழுமையாக நடக்கலாம். எனினும், இன்னும் இரண்டு நாள் மட்டும் உள்ளதால், போட்டி 'டிரா' ஆக அதிக வாய்ப்புள்ளது.

பைனலுக்கு பாதிப்பு வருமா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் பைனலில் மோதும். தற்போது இந்திய அணி, 71.67 சதவீத புள்ளியுடன் (10 டெஸ்ட், 7 வெற்றி, 2 'டிரா', 1 தோல்வி) முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (62.50%, 12ல் 8 வெற்றி, 3 'டிரா', 1 தோல்வி), இலங்கை (55.56%, 9ல் 5 வெற்றி, 4 'டிரா') அடுத்த இரு இடத்தில் உள்ளன.
* வங்கதேச தொடரை 2-0 என வென்றால் இந்தியா 74.24% புள்ளி பெறும். மீதமுள்ள 8 டெஸ்டில் (நியூசி.,யுடன் 3, ஆஸி.,யுடன் 5) 3ல் வென்றால், பைனலுக்கு முன்னேறிவிடலாம்.
* தற்போது கான்பூர் டெஸ்ட் 'டிரா' ஆனால், இந்தியாவின் புள்ளி சதவீதம், 68.18 ஆக குறையும். இதனால் அடுத்த 8 டெஸ்டில் இந்தியா, குறைந்தது 5ல் வென்றால் மட்டுமே, பைனல் வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.
* இதனால் வரும் நியூசிலாந்து தொடரை இந்தியா 3-0 என வென்றாக வேண்டும். பின், ஆஸ்திரேலிய மண்ணில் குறைந்தது 2 டெஸ்டில் (மொத்தம் 5) வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையெனில் பைனலுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படலாம்.

Advertisement