ஹிஸ்புல்லாவின் மற்றொரு தலைவர் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பலி

பெய்ரூட், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், அதன் மற்றொரு முக்கிய தலைவரும் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல், அதன் அண்டை நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக்கியுள்ளது.

இதன் உச்சகட்டமாக, 32 ஆண்டுகளாக ஹிஸ்புல்லாவின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார். இது, ஹிஸ்புல்லா அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து, இஸ்ரேல் நேற்றும் தாக்குதல்களை தொடர்ந்தது. இதில், ஹிஸ்புல்லாவின் மத்திய கவுன்சில் துணைத் தலைவரான நாபில் காவோக் கொல்லப்பட்டார்.

முன்னதாக ஹசன் நஸ்ரல்லா மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது, ஹிஸ்புல்லாவின் மற்றொரு முக்கிய தலைவரான அலி கராக்கியும் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா உறுதி செய்துள்ளது.

லெபனானில் கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், 156 பெண்கள், 87 குழந்தைகள் உட்பட, 1,030 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, லெபனானின் தென் பகுதிக்குள் நுழைந்து இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதையடுத்து, லெபனானின் தென்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

லெபனான் அரசின் தகவலின்படி, 2.50 லட்சம் பேர் பாதுகாப்பு மையங்களில் தஞ்சமடைந்துஉள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஏவுகணைகளை செலுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனால், அவை வழிமறித்து தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

கடந்தாண்டு, அக்., 7ல் இஸ்ரேல் மீது காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேலின் வடக்கே உள்ள லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Advertisement