125 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா

கீவ், உக்ரைனின், 125 'ட்ரோன்'களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து நடக்கிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவின் ஏழு பிராந்தியங்களில், ஒரே இரவில் உக்ரைனின், 125 ட்ரோன் எனப்படும், ஆளில்லா சிறிய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக, அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

வோரோனேஜ் பகுதியில், 17 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவற்றின் பாகங்கள் விழுந்ததில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கடும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. ரோஸ்டோவ் பகுதியில், 18 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இவற்றின் பாகங்கள் அங்குள்ள வனப்பகுதியில் விழுந்ததில், காட்டுத்தீ ஏற்பட்டது. இதை அணைக்கும் பணியில், தீயணைப்புத் துறை ஈடுபட்டு வருகிறது.

இதே போல், ரஷ்யாவின் 22 ட்ரோன்களை, ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவமும் தெரிவித்துள்ளது.

சுமி, ஒடேசா உள்ளிட்ட பகுதிகளில், 15 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மின்னணு பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி ஐந்து ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ராணுவம் குறிப்பிட்டது.

Advertisement