மணிப்பூரில் இரு இளைஞர்கள் கடத்தல் கூகி போராளிகள் செயலா என விசாரணை

இம்பால்,மணிப்பூரில் இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டதாக வீடியோ வெளியான நிலையில், அது கூகி போராளிகள் செயலா என்பது தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டு, அவர்களை தேடும் பணி தொடர்கிறது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த ஆண்டு மே மாதம் கூகி - மெய்டி பழங்குடியின சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

வீடு திரும்பிய இளைஞர்



இது, மாநிலத்தில் பல பகுதிகளில் வன்முறையாக வெடித்ததில், 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றனர்.

மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகளால் இங்கு வன்முறை சம்பவங்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன.

இந்நிலையில், தவுபல் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கீதெல்மன்பியில் நடந்த பணியாளர் தேர்வு ஆணையத்தின் ஆட்சேர்ப்பு தேர்வில் பங்ேகற்க நேற்று முன்தினம் சென்றனர். ஆனால், அவர்கள் வீடு திரும்பவில்லை.

இதில், நிங்கோம்பம் ஜான்சன் சிங் என்ற இளைஞர் மட்டும் படுகாயங்களுடன் போலீசாரால் நேற்று மீட்கப்பட்டார். மற்ற இரு இளைஞர்கள் ஆயுதமேந்திய போராளிகள் குழுவால் கடத்தப்பட்டதாக வீடு திரும்பிய இளைஞர் தெரிவித்தார்.

சமூக வலைதள பதிவு



இந்த சூழலில், இரு இளைஞர்கள் தங்களை காப்பாற்ற உதவும்படி கோரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

அது மாயமான இரு இளைஞர்கள் என தெரியவந்ததை அடுத்து, அவர்களை மீட்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள், போலீஸ் உயரதிகாரிகளுடன் முதல்வர் பைரேன் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார்.

'கூகி போராளிகளால் இரண்டு அப்பாவி இளைஞர்கள் கடத்தப்பட்டது கவலையளிக்கிறது. அவர்களை காப்பாற்றுவதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.

'இது போன்ற கொடூரமான செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். அவர்களை பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, பைரேன் சிங் தன் சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement