மனதின் குரல் - தேசத்தின் பலம்: மோடி பெருமிதம்

புதுடில்லி, ''நாட்டின் உணர்வை கொண்டாடும் ஒரு தனித்துவமான தளமாக, 'மன் கி பாத்' நிகழ்ச்சி மாறியுள்ளது. மேலும், தேசத்தின் கூட்டு பலத்தை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

கடந்த 2014ல், பிரதமராக முதன்முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். அப்போது முதல், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், வானொலியில், 'மன் கி பாத்' எனப்படும் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி வாயிலாக, நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி, 10 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.

இந்த நிகழ்ச்சியின், 114வது ஒலிபரப்பில் பிரதமர் மோடி நேற்று கூறியதாவது:

மனதின் குரல் நிகழ்ச்சி, 10 ஆண்டுகளுக்கு முன், அக்., 3-ல், விஜயதசமி தினத்தன்று துவங்கப்பட்டது. வரும் அக்., 3ல், இந்த நிகழ்ச்சி, 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால், அன்றைய தினம் நவராத்திரி பண்டிகையின் முதல் நாள்.

இந்த நீண்டநெடிய பயணத்தில் பல கட்டங்களை என்னால் மறக்க முடியாது. இந்த பயணத்தில் கோடிக்கணக்கான நேயர்கள் எனக்கு தோள் கொடுத்தனர்.

அவர்கள் நாட்டின் அனைத்து இடங்களிலிருந்தும் தகவல்களை திரட்டித் தந்தனர். மனதின் குரல் நேயர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள்.

காரசாரமான விஷயங்கள் இல்லையென்றால், ஒரு நிகழ்ச்சி அதிக கவனத்தைப் பெறாது என கூறுவர்.

ஆனால், மனதின் குரல் நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி வெற்றி பெற்றுள்ளது. நாட்டின் உணர்வை கொண்டாடும் ஒரு தனித்துவமான தளமாக, மன் கி பாத் நிகழ்ச்சி மாறியுள்ளது. மேலும், தேசத்தின் கூட்டு பலத்தை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது.

கடந்த சில வாரங்களாகவே நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர் சேமிப்பு எத்தனை மகத்துவம் வாய்ந்தது, நீரைச் சேமித்து வைப்பது எத்தனை அவசியமானது என்பதை இந்த மழைக்காலம் நமக்கு அறிவுறுத்துகிறது.

நம் நாடு ஒரு உற்பத்தி சக்தி மையமாக மாறியுள்ளது. நாட்டின் இளைஞர் சக்தியால் தான், ஒட்டுமொத்த உலகமும் நம்மை உற்று நோக்குகிறது. ஆட்டோமொபைல், ஜவுளி என, அனைத்து துறைகளிலும் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



மதுரை ஆசிரியைக்கு பாராட்டு

நம் நாளிதழில், ஆக., 11ல், மதுரை வரிச்சியூர் அரசு உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியை சுபஸ்ரீ குறித்த கட்டுரை வெளியானது.பிரதமர் மோடி கூறியதாவது:தமிழகத்தின் மதுரையில் வசிக்கும் சுபஸ்ரீ, தொழில் ரீதியாக ஆசிரியையாக இருந்தாலும், மருத்துவத் தாவரங்களின் மேல் அலாதியான பிரியம் இருக்கிறது. ஒருமுறை இவரது தந்தையை நச்சுப்பாம்பு தீண்டியபோது, பாரம்பரியமான மூலிகைகளை பயன்படுத்தி அவரை காப்பாற்றி உள்ளார். இச்சம்பவத்திற்கு பின் பாரம்பரியமான மருத்துவத் தாவரங்களைப் பற்றிய தேடலை துவக்கினார். இவருடைய வித்தியாசமான மூலிகைப் பூங்காவில், 500க்கும் மேற்பட்ட அரியவகை மூலிகைச் செடிகள் இருக்கின்றன.'கோவிட்' காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மருத்துவ மூலிகைகளை மக்களுக்கு அவர் கொண்டு சேர்த்திருக்கிறார். இன்று இவருடைய மூலிகைப் பூங்காவுக்கு, தொலைதுார பகுதியில் இருந்தும் பலர் வருகின்றனர். அனைவருக்கும் மருத்துவ தாவரங்கள் பற்றிய தகவல்களையும், பயன்பாடுகளையும் விளக்குகிறார். சுபஸ்ரீ, பலநுாறு ஆண்டுகளாக நம் கலாசாரத்தின் அங்கமாக விளங்கும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறார். அவருடைய மூலிகைப் பூங்கா, நம் கடந்த காலத்தை வருங்காலத்தோடு இணைக்கிறது. அவருக்கு நம் பலப்பல நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.பிரதமரின் பாராட்டு குறித்து, ஆசிரியை சுபஸ்ரீ கூறுகையில், ''இரண்டு நாள் முன்னதாக துார்தர்ஷனில் இருந்து மூலிகைத் தோட்டம் பற்றி கேட்டுச் சென்றனர். பிரதமர் என்னைப் பற்றி பேசுவார் என யாரும் கூறவில்லை. நாட்டின் கடைக்கோடியில் உள்ள என்னை, பிரதமரே தேடிப்பிடித்து தேர்வு செய்து பாராட்டியது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு காரணமான, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி,'' என்றார்.இதே போல், புதுச்சேரி கடற்கரையில் துாய்மைப் பணி குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வரும் ரம்யா என்ற பெண்ணுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

Advertisement