ஹரியானாவில் தோல்வி ஏன்? காங்கிரஸ் ஆராய வேண்டும்!

ஹரியானா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்ட சபை தேர்தலில், பா.ஜ., மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ்தான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என, ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தாலும், பா.ஜ.,வின் செயல்திட்ட ரீதியான பிரசாரம், அந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி விட்டது.

கடந்த, 2019 சட்டசபை தேர்தலில் பெற்ற இடங்களைவிட கூடுதல் இடங்களையும், பா.ஜ., பிடித்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. தேர்தல் பிரசாரம் நடைபெற்ற நேரத்தில், காங்கிரசே முந்து வதாகவும், ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதாகவும் கூறப்பட்டது. அவற்றை எல்லாம் பிரதமர் மோடி மற்றும் ஹரியானா பா.ஜ., தலைவர்களின் பிரசாரமும், அவர்களின் திறமையான அணுகுமுறையும் முறியடித்து விட்டது.

ஹரியானா முதல்வராக நீண்ட காலம் பதவி வகித்த மனோகர்லால் கட்டார், இந்த ஆண்டின் முற்பகுதியில் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக நயாப்சிங் சைனியை முதல்வராக பா.ஜ., மேலிடம் தேர்வு செய்தது. அவரின் தேர்வும், பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்து விட்டது.

குறிப்பாக, ஜாட் சமூகத்தினர் அல்லாதவர்கள் மத்தியில், அவரின் செல்வாக்கு அதிகரித்து, ஆளுங்கட்சிக்கு எதிராக நிலவிய அதிருப்தியை வெற்றி கொண்டு விட்டது. இதற்கிடையில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், இந்தத் தேர்தலில் களமிறங்கி பா.ஜ.,வுக்கு ஆதரவாக மக்கள் ஆதரவை திரட்டும் பணிகளை மேற்கொண்டதும் கூடுதல் பலன் தந்துள்ளது.

அதேநேரத்தில், ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் பிரசாரமானது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள, 10 தொகுதி களில், ஐந்து தொகுதிகளை காங்கிரஸ் பிடித்ததால், அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுலும், அவரது தலைமையிலான குழுவினரும், தங்கள் கட்சி எப்படியும் இம்முறை வெற்றி பெற்று விடும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்து விட்டனர்.

அதுமட்டுமின்றி, ஹரியானா காங்., மூத்த தலைவரான முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, திறம்பட செயல்பட்டு வெற்றி தேடித் தருவார் என்று நினைத்ததும், பாதகமாக அமைந்து விட்டது. மேலும், காங்., கட்சியில் நிலவிய கோஷ்டி பூசலும், பெருமளவிலான வாக்காளர்களை கவர முடியாமல் போனதற்கான முக்கிய காரணம்.

இதற்கிடையில், டில்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடித்ததன் வாயிலாக, தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, ஹரியானா சட்டசபை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை; போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

தேசிய கட்சியான பா.ஜ., சமீப காலமாக, மாநிலங் களில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் போது, உள்ளூர் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரியான செயல்திட்டங்களை பின்பற்றத் துவங்கி உள்ளது. அதாவது, மாநில கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடுவது போன்று, பா.ஜ.,வும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஹரியானா தேர்தலிலும், அதேபோன்ற அணுகுமுறையை பா.ஜ., பின்பற்றியதும், அக்கட்சியின் ஹாட்ரிக் வெற்றிக்கு முக்கிய காரணம்.

ஜம்மு - காஷ்மீரில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும், அங்கு பா.ஜ., ஒன்றும் மோசமான தோல்வியை எதிர்கொள்ளவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடிக்கும் அளவுக்கு கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதேநேரத்தில், ஹரியானாவில் மூன்றாவது முறை வென்றதன் வாயிலாக, தன் நிலையை பலப்படுத்தி உள்ளது. எனவே, காங்கிரஸ் தன் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதுடன், வெற்றிக்கான புதிய செயல்திட்டங்களையும் வகுத்து செயல்பட வேண்டும்; தவறுகளை திருத்திக் கொள்ளவும் முன்வர வேண்டும். குறிப்பாக, அடுத்து வரக்கூடிய தேர்தலில், பலமான சவால் தரக்கூடிய கட்சியாக உருவாக வேண்டியது அவசியம். அப்போதுதான் வெற்றிக்கனியை சுவைக்க முடியும்.

Advertisement