உதித்தாவுக்கு ரூ. 32 லட்சம் * ஹாக்கி இந்தியா லீக் ஏலத்தில்...

புதுடில்லி: ஹாக்கி இந்தியா லீக் பெண்களுக்கான ஏலத்தில் இந்தியாவின் உதித்தா, ரூ. 32 லட்சத்துக்கு பெங்கால் அணியில் இணைந்தார்.
ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்.ஐ.,) சார்பில், 2013ல் ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் துவங்கப்பட்டது. கடந்த 2017க்குப் பின், மீண்டும் இத்தொடர் வரும் டிச. 28- 2025, பிப் 1ல் நடக்கவுள்ளது. ஆண்கள் (8), பெண்கள் (4) என மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் டில்லியில் நடந்தது.
இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், அதிகபட்சமாக ரூ. 78 லட்சத்துக்கு, சூர்மா ஹாக்கி கிளப் அணி (பஞ்சாப்) வாங்கியது. தமிழகத்தின் செல்வம் கார்த்தி (ரூ. 24 லட்சம்), தமிழக டிராகன்ஸ் அணியில் இணைந்தார்.
நேற்று நடந்த பெண்களுக்கான ஏலம் நடந்தது. 350 பேர் இடம் பெற்றுள்ளனர். 4 அணி சார்பில் 86 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தியாவின் தற்காப்பு வீராங்கனை உதித்தா துஹான், அதிகபட்சம் ரூ. 32 லட்சத்துக்கு ஏலம் போனார். இவரை பெங்கால் டைகர்ஸ் அணி வாங்கியது. அடுத்து நெதர்லாந்தின் இப்பி ஜான்சென், ரூ. 29 லட்சத்திற்கு ஒடிசா வாரியர்ஸ் அணியில் இணைந்தார்.
தவிர இந்திய வீராங்கனைகள் லால்ரெம்சியாமி (ரூ. 25 லட்சம், பெங்கால்), சுனேலிதா (ரூ. 24 லட்சம், டில்லி), சங்கிதா குமாரி (ரூ. 22 லட்சம், டில்லி), கோல் கீப்பர் சவிதா புனியா (ரூ. 20 லட்சம், சூர்மா), சலிமா (ரூ. 20 லட்சம், சூர்மா), தீபிகா (ரூ. 20 லட்சம், டில்லி), நவ்னீத் கவுர் (ரூ. 19 லட்சம், டில்லி), இஷிகா சவுத்ரி (ரூ. 16 லட்சம், ஒடிசா) அதிக தொகைக்கு வாங்கப்பட்டனர்.
ஜெர்மனியின் சார்லொட்டீ (ரூ. 16 லட்சம்), பெல்ஜியத்தின் இங்கிள்பெர்ட் (ரூ. 16 லட்சம்) சூர்மா அணியில் சேர்ந்தனர். மற்ற இந்திய வீராங்கனைகள் மும்தாஜ் கான் (ரூ. 11 லட்சம், டில்லி), மஹிமா சவுத்ரி (ரூ. 10 லட்சம், பெங்கால்), வந்தனா கட்டாரியா (ரூ. 10.5 லட்சம், பெங்கால்) அடிப்படை விலைக்கு சற்று அதிகமாக வாங்கப்பட்டனர்.

Advertisement