லாட்டரி சீட்டு விற்ற 9 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி.,யாக கலைவாணன் பதவியேற்றார். அவர், நேற்று சிறப்பு அதிரடிப் படை பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கணேசன், கார்த்திகேயன் மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்பொழுது புதுச்சேரி சிறப்பு அதிரடிப் படை போலீசாரின் செயல்பாடுகள் படுமோசமாக இருப்பதாக கடிந்து கொண்டார். பின், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சரிசெய்ய முதல் கட்டமாக கஞ்சா, லாட்டரி, விபசாரம், திருட்டு, மணல் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று மாலை பல்வேறு குழுக்களாக பிரிந்து புதுச்சேரி முழுதும் முதற்கட்டமாக லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்தனர்.
அதன்படி, லாட்டரி சீட்டுகள் விற்ற வில்லியனுார் வேல்முருகன், 39; வாணரபேட்டை விஜயன், 48; பிள்ளைத்தோட்டம் பழனிகுமார், 49; சாரம் ஸ்டீபன் ராஜ், 28; கவுண்டம்பாளையம் குமரன், 57; வேல்ராம்பட்டு கதிர்வேல், 50; முதலியார்பேட்டை குமார், 50; தயாளன், 62; டோனி, 46, ஆகிய ஒன்பது பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று எண் லாட்டரி சீட்டுகள் மற்றும் 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.