தி.மு.க.,வின் சமூகநீதி முகமூடி உடைந்துள்ளது: ராமதாஸ் 'பொளேர்'

8

சென்னை: 'ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது என்ற தி.மு.க.,வின் சமூகநீதி முகமூடி உடைந்துள்ளது' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இது குறித்து, நிருபர்கள் சந்திப்பில், ராமதாஸ் கூறியதாவது: 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்று சமூகவலைதளத்தில் நான் குறிப்பிட்ட நன்னூல் சூத்திரம் அரசியலுக்கும் கூட்டணிக்கும் பொருந்தாது. நான் பா.ஜ.,வில் இருந்து விலகவில்லை. இதில் எந்த நோக்கமும் இல்லை. இது நன்னூல் சூத்திரம். தி.மு.க., அரசின் அடக்குமுறைகளையும், பொய்வழக்குகளையும் முறியடிக்கும் திறனும், உறுதியும் பா.ம.க.,வுக்கு உண்டு.


அதேநேரத்தில் வன்னியர்களுக்கு எதிராக தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் கும்பலை ஆதரிக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,வுக்கு பா.ம.க., மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி. ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது என்ற தி.மு.க.,வின் சமூகநீதி முகமூடி உடைந்துள்ளது. ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்திவிடலாம்.


கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட செல்லத்துரை என்ற இளைஞரின் குடும்பத்தினரையும், ஊர்மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது எஸ்.சி மற்றும் எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கடலூரில் நடக்கும் நிகழ்வு, போலீசார் செயல்பாடு களப்பிரர் ஆட்சியின் நீட்சியாகவே தோன்றுகிறது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Advertisement