காஞ்சியில் 3 ஆண்டில் தெரு நாய்களால் 8,213 பேர்... பாதிப்பு :ஒவ்வொரு ஆண்டும் 3,000க்கும் மேற்பட்டோருக்கு 'கடி'

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தினமும் நகரவாசிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன்றனர். மாநகரட்சி பகுதியில் மூன்று ஆண்டுகளில் மட்டும் தெரு நாய்கள் கடித்து 8,213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மாநிலம் முழுதும், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜன., 1 முதல் அக்., வரை, 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

அதில், 36 பேர் வெறிநாய்க்கடி என்ற, 'ரேபிஸ்' நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர். கடந்தாண்டு, 18 பேர் உயிரிழந்த நிலையில், நடப்பாண்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியிலும் தெருநாய்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் 4,000க்கும் அதிகமான தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக தெரிந்துள்ளது. தற்போது, இந்த எண்ணிக்கை அதிகரித்து இருக்கும்.

தெருநாய்கள் பொதுமக்களை துரத்தி கடிக்கும் சம்பவங்கள் காஞ்சிபுரத்தின் அனைத்து பகுதிகளிலும் அன்றாடம் நடக்கிறது.

பிள்ளையார்பாளையம், திருக்காலிமேடு, செவிலிமேடு, ஓரிக்கை என சில பகுதிகளில், ஒரே இடத்தில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி வருவது, பகுதிவாசிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மட்டும், ஓராண்டுக்கு சராசரியாக 3,000க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சை பெற்றுள்ளனர்.

கடந்த 2022ல், ஜனவரி முதல் டிசம்பர் வரை 3,231 பேரும், 2023ல் 3,632 பேரும், 2024 ஆகஸ்ட் வரை 1,350 பேரும் காஞ்சிபுரத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெரு நாய்களின் பெருக்கத்தை குறைக்க, அவற்றை பிடித்து கருத்தடை சிகிச்சை செய்ய வேண்டும் என, பகுதிவாசிகளும், கவுன்சிலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

மாநகராட்சி கூட்டத்திலும், இப்பிரச்னையை கவுன்சிலர்கள் முன்வைக்கின்றனர். ஆனால், நாய்களை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரி கூறியதாவது:

தெரு நாய்களை கட்டுப்படுத்த, கடந்தாண்டு கூட ஏராளமான நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்தோம். இம்முறை பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

நாய்களை பிடிக்கவும், அவற்றை மீண்டும் அதே பகுதிகளில் கொண்டு சென்று விடவும் தன்னார்வ அமைப்புடன் பேசி வருகிறோம்.

பிடிக்கப்பட்ட நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள, கால்நடை மருத்துவருக்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு நிதி வேண்டும்.

மேலும், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தேவையான இடவசதி, சிகிச்சை அரங்கு போன்றவை தேவைப்படுகிறது. ஒரு நாய்க்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள, 1,000 ரூபாய்க்கு மேலாக, மருத்துவருக்கு கட்டணம் செலுத்த வேண்டும். நிதி தேவை பற்றியும் கமிஷனரிடம் கேட்டுள்ளோம்.

நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை முடிந்து, அதே பகுதிகளில் விடுவோம். இனப்பெருக்கத்தை குறைக்க, அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. விரைவில் இதற்கான தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





காஞ்சிபுரம் மாவட்டம்

2022 2023 2024 (ஆகஸ்ட் வரை)ஜனவரி 308 461 348பிப்ரவரி 290 308 309மார்ச் 360 342 418ஏப்ரல் 223 266 343மே 259 244 330ஜூன் 251 241 394ஜூலை 265 253 296ஆகஸ்ட் 232 222 330செப்டம்பர் 252 216அக்டோபர் 321 241நவம்பர் 252 375டிசம்பர் 218 463மொத்தம் 3,231 3,632 1,350

Advertisement