மீண்டும் 'ஸ்மார்ட் பார்க்கிங்' பணிகளை துவக்கியது 'கும்டா'
சென்னை:சென்னையில் வாகன நிறுத்துமிட பிரச்னைக்கு தீர்வாக, மீண்டும்,'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை, போக்குவரத்து குழுமமான, 'கும்டா' துவக்கி உள்ளது.
சென்னையில் பல்வேறு பொது போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், பெரும்பாலான மக்கள் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்த விரும்புகின்றனர்.
இவ்வாறு பயன்படுத்தப்படும் வாகனங்களை நிறுத்துவதற்கான, முறையான இடவசதி கிடைப்பது சிக்கலாகிறது. இதில், வீட்டு வாசல் அல்லது தெருவில் இருந்தே, பொது போக்குவரத்து வசதிகளை மக்கள் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்து குழுமமான, 'கும்டா' இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த வகையில், சென்னையில் வாகன நிறுத்துமிட வசதிகளை மேம்படுத்தும் வகையில், ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த, கும்டா அமைப்பு முடிவு செய்துள்ளது.
'ஸ்மார்ட் பார்க்கிங்'
இது குறித்து 'கும்டா' அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை, சில ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி துவக்கியது. சில நடைமுறை பிரச்னைகள் காரணமாக, இத்திட்டம் பாதியில் முடங்கியது.
இந்நிலையில், நவீன தொழில்நுட்பத்துடன், ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த, கும்டா அமைப்பு முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, கும்டா இத்திட்டத்தை செயல்படுத்த களம் இறங்கியுள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து, தொகுப்பாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். சாலையோர வாகன நிறுத்துமிடங்கள், தனிப்பட்ட வளாக வாகன நிறுத்துமிடங்கள் குறித்த தகவல்கள் ஒருங்கிணைக்கப்படும்.
மொபைல் போன் செயலி வாயிலாக, பொதுமக்கள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வாகன நிறுத்துமிடங்களை, முன்பதிவு செய்து பயன்படுத்தலாம்.
வீட்டில் இருந்து புறப்படும் போதே, வாகன நிறுத்துமிடத்தை முன்பதிவு செய்வதால் நெரிசல், அலைச்சல் பிரச்னைகள் தவிர்க்கப்படும். முதல்கட்டமாக அண்ணா நகர் பகுதியில், 43 கி.மீ., சாலைகளில், 200 இடங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
இதற்கான வல்லுனர் தேர்வு பணிகள் துவங்கியுள்ளன. கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பின், இத்திட்டம் துவங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.