முதல்வர் திறந்து 5 மாதமாகியும் முடியாத கார்கில் நகர் அடுக்குமாடி குடியிருப்பு பணி

திருவொற்றியூர்:முதல்வர் திறந்து வைத்த கார்கில் நகர் அடுக்குமாடி குடியிருப்புகளில், ஐந்து மாதங்களாகியும் பயனாளிகள் குடியமர்த்தப்படவில்லை.

திருவொற்றியூர், கார்கில் நகர் கழிவெளி நிலத்தில், 190.88 கோடி ரூபாய் செலவில், 1,200 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி, 2018ல் துவங்கியது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், தளம் ஒன்றிற்கு, 20 வீடுகள் வீதம், 15 தளங்களில், 300 வீடுகள் என, நான்கு தொகுப்புகளாக, 1,200 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

ஜெர்மானிய தொழில்நுட்பமான, மைவான் முறையில், அச்சுகள் வைத்து, கான்கிரீட் கலவைகளை ஊற்றி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியெழுப்பப்பட்டன. அதன்படி, வரவேற்பறை, கழிப்பறை, சமயலறை, படுக்கையறை, பால்கனி என, 410 சதுர அடியில் ஒவ்வொரு வீடும் கட்டப்பட்டுள்ளன.

வீடு ஒன்றின் விலை, 13.93 லட்சம் ரூபாய். அதில், மத்திய - மாநில அரசு மானியம், 7.50 லட்சம் ரூபாய். பயனாளிகள் 6.93 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.

கூவம் நதி சீரமைப்பு பணியின் போது வீடிழந்த குடிசை பகுதிவாசிகளுக்கு, இந்த வீடுகள் ஒதுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர். அதன்படி, கட்டுமான பணிகள் முடிந்து, ஜூலை மாதம், முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக குடியிருப்புகளை திறந்து வைத்தார். இருப்பினும், பிளம்பிங், எலக்ட்ரிக்கல் பணிகள் பாக்கியிருந்தன.

அந்த பணிகள் முடிந்து, ஓரிரு மாதங்களில், பயனாளிகள் குடியமர்வு செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐந்து மாதங்களாகியும், பயனாளிகள் யாரும் குடிமயர்த்தப்படவில்லை.

விரைவில், அனைத்து நடைமுறை பணிகளும் முடிந்து, பயனாளிகள் குடிமயர்த்தப்படுவர் என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

Advertisement