கணேசபுரம் சுரங்கப்பாதை மூடல் முட்டி மோதும் வாகன ஓட்டிகள்

பெரம்பூர்:மேம்பாலப்பணிக்காக பெரம்பூர் கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதால், காலை மற்றும் மாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

போதிய மாற்று வழிகள் இல்லாததால், பைக்கில் செல்வோர் பல கிலோ மீட்டர் சுற்றி வர சிரமப்பட்டு, பெரம்பூர் - வியாசர்பாடி இடையே உள்ள மேட்டுப்பாளையம் சுரங்க சந்துக்குள் முட்டி மோதி சென்று வருகின்றனர். ஒரு பைக் மட்டுமே போகக்கூடிய அந்த அவசர வழியில், நேற்று காலை 100க்கும் மேற்பட்ட பைக்குள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:

கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டதால், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் மற்றும் வியாசர்பாடி கல்யாணபுரம் மேம்பாலம் வழியே மட்டுமே செல்ல முடியும்.

வியாசர்பாடி கல்யாணபுரம் மேம்பாலம் வழியே சென்றால், ஓட்டேரி அல்லது ஜமாலியா செல்வதற்கு 5 கி.மீ., சுற்றி வர வேண்டும். பெரம்பூர் மேம்பாலம் வழியே செல்ல முற்பட்டால், அங்குள்ள சுரங்கப்பாதை எந்நேரமும் நெரிசலாகவே உள்ளது. பல சமயம் உயரம் அதிகமான சரக்கு வாகனங்கள் சுரங்கப்பாதைக்குள் சென்று சிக்கி விடுகின்றன. இதனால் மேலும் நெரிசல் ஏற்படுகிறது.

அதேபோல், பெரம்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள சுரங்கநடைபாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீர், தற்போது கழிவுநீராகிவிட்டது. அதை வெளியேற்றாமல், பாதையை பயன்படுத்த முடியாதபடி தடுப்பு வைத்துள்ளனர். இதனால் பலர் தண்டவாளத்தில் கடக்கின்றனர். இதனால் உயிர்பலி ஆபத்தும் உள்ளது.

வடசென்னையில் செயல்படுத்தும் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். இதற்கு முன் பெரம்பூர் மேம்பாலம் மற்றும் கல்யாணபுரம் மேம்பாலங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் வைத்தே முடித்தனர். அதேபோல் கணேசபுரம் மேம்பாலத்தையும் கிடப்பில் போடாமல் விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement