போர்வெல்களில் மஞ்சள் நிற நீர் பேடரப்பள்ளி பொதுமக்கள் அச்சம்
போர்வெல்களில் மஞ்சள் நிற நீர்
பேடரப்பள்ளி பொதுமக்கள் அச்சம்
ஓசூர், நவ. 19-
ஓசூர் மாநகராட்சி, 3வது வார்டுக்கு உட்பட்ட பேடரப்பள்ளி ஏரியில், தொழிற்சாலை கழிவுகள் அதிகளவில் கலந்து வருகிறது.
இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சில தொழிலாளர்கள் அதன் வளாகத்தில் பெரியளவில் போர்வெல் அமைத்து, ரசாயன கழிவுநீரை சுத்திகரிக்காமல் அதற்குள் விடுகின்றன. அதனால், பேடரப்பள்ளியில் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளது. இந்த நீரை பயன்படுத்தும் மக்களுக்கு, பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. பேடரப்பள்ளியில் நேற்று, திடீரென வீடுகளிலுள்ள போர்வெல்களில் இருந்து வந்த தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருந்தது. அச்சமடைந்த மக்கள், அப்பகுதி கவுன்சிலர் ரஜினிக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், மாநகர நல அலுவலர் அஜிதா ஆகியோர், பேடரப்பள்ளி பகுதியிலுள்ள வீடுகளில் ஆய்வு செய்து, தண்ணீர் மஞ்சள் நிறமாக இருப்பதை உறுதி செய்தனர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய, கமிஷனர் ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை சமர்பிக்க உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.