ஸ்பெயினுக்கு ஒரு வார பயணம்: 1000 ஊழியர்களை சுற்றுலா அனுப்புது சென்னை நிறுவனம்
சென்னை: சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான காசா கிராண்ட், 1,000 ஊழியர்களை ஸ்பெயினுக்கு ஒரு வார காலம் சுற்றுலா அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
நிறுவனத்தின் கடந்த நிதியாண்டின் விற்பனை இலக்கை அடைவதில் முக்கிய பங்காற்றிய ஊழியர்களி்ன் அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு மனப்பான்மையை அங்கீகரிப்பதற்காக, திட்டம் வகுத்துள்ளோம்.
அதன்படி தலைமை நிர்வாகி முதலான 1000 ஊழியர்களை ஒன்றிணைத்து, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு ஒரு வாரம் சுற்றுலா அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
ஒரு வார காலத்தின் அனைத்து செலவுகளையும் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது.
ஸ்பெயினின் செழுமையான கலாசாரம், வரலாற்று அடையாளங்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளை அனுபவிக்க இந்த பயணம் அவர்களுக்கு உதவியாக இருக்கும்; இது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை அவர்களுக்கு கொடுக்கும்.
இதேபோல், 2022ல் சுவிட்சர்லாந்திற்கும், 2023ல் ஆஸ்திரேலியாவிற்கும் ஊழியர்களை அழைத்துச் சென்றுள்ளோம்.
இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்தது.