கயானா வந்தது எனது அதிர்ஷ்டம்: பிரதமர் மோடி
ஜார்ஜ்டவுன்: '' பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' என பிரதமர் மோடி கூறினார்.
பிரேசிலில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்றதை தொடர்ந்து அரசு முறை பயணமாக பிரதமர் மோடி கயானா நாட்டிற்கு சென்றுள்ளார். 56 ஆண்டுக்கு பிறகு அந்நாட்டிற்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்து உள்ளது. விமான நிலையத்தில் அவரை கயானா அதிபர் இர்பான் அலி வரவேற்றார்.
இன்று இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிறகு பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறியதாவது: சிறப்பான வரவேற்பு அளித்த அதிபர் இர்பான் அலிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். 56 ஆண்டுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இங்கு வந்துள்ளது முக்கியமான மைல்கல்லாகும்.
எனக்கு இந்நாட்டுடன் தனிப்பட்ட முறையில் உறவு உள்ளது. 24 ஆண்டுக்கு முன்னர் தனிப்பட்ட முறையில் நான் இங்கு வந்துள்ளேன். தற்போது பிரதமர் ஆக வருவது எனது அதிர்ஷ்டம். இர்பான் அலிக்கு இந்தியாவுடன் சிறப்பான உறவு உள்ளது. நமது உறவை பலப்படுத்துவதற்கான புதிய முன்னெடுப்புகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். கயானாவில், திறன் மேம்பாட்டை கட்டமைப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றி உள்ளது.
சிறுதானியங்களை வழங்கி, கயானாவின் உணவு பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். மற்ற பயிர்கள் அறுவடையிலும் நாங்கள் உதவி வருகிறோம். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் கயானாவிற்கு முக்கிய பங்கு உள்ளது. நீண்ட கால ஒத்துழைப்பிற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பசுமை மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கி நாங்கள் நகர்ந்துள்ளோம்.
கயானாவிற்கு இரண்டு டோர்னியர் போர் விமானங்களை இந்தியா கடந்த ஆண்டு வழங்கியது. சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் தேவை என்பதை ஒரு மனதாக ஒப்புக் கொண்டுள்ளோம். இந்திய சமுதாயத்தினரின் தூதராக கயானா அதிபர் திகழ்கிறார். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.