அறுவடை பயிர்களை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்
நரிக்குடி : நரிக்குடி பகுதியில் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
நரிக்குடி பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு வைகை ஆற்று தண்ணீர் கிடைத்ததால், விவசாயிகள் அதிக அளவில் நெல் பயிரிட்டனர். களை எடுத்து, உரமிட்டு நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. ஓரிரு நாட்களில் அறுவடை செய்ய விவசாயிகள் முடிவு செய்து இருந்தனர். இந்நிலையில் காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக நெற்பயிர்களுக்குள் புகுந்து சேதப்படுத்தியது.
தரையில் சாய்ந்ததால் விளைந்த கதிர்கள் முளைக்க துவங்கிவிடும். இனி அறுவடை செய்தாலும் எதிர்பார்த்த அளவு நெல் கிடைப்பது அரிது. செலவு செய்த பணத்திற்கு கூட நெல் மூடைகள் வருவது கஷ்டம். அதிக கடன் வாங்கி விவசாயம் செய்து, அறுவடை சமயத்தில் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் மன வேதனை அடைந்தனர்.
வாங்கிய கடனை எவ்வாறு அடைக்கப் போகிறோம் என புலம்புகின்றனர். காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சுட்டு பிடிக்க அரசாணை வெளியிடப்பட்டது. எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. வெறும் கண்துடைப்பாக அறிவிக்கப்பட்டதா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். அச்சுறுத்தலாக உள்ள காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.