மே.வங்க போலீஸ் இசைக்குழுவுக்கு அனுமதி மறுப்பு: மம்தா கொதிப்பு

8

கோல்கட்டா; மேற்கு வங்கத்தில், குடியரசு தின நிகழ்ச்சியின் போது ராஜ்பவனுக்குள் போலீஸ் இசைக்குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், முதல்வர் மம்தாவும் உள்ளே செல்லாமல் கண்டனம் தெரிவித்த சம்பவம் அரங்கேறியது.


மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் குடியரசு தின தேநீர் விருந்துக்கு நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்றார்.


அப்போது அவரிடம் மேற்கு வங்க போலீஸ் இசைக்குழுவினரை ராஜ்பவனுக்குள் அனுமதிக்கவில்லை என்ற தகவல் கூறப்பட்டது. மத்திய பாதுகாப்பு படையான எஸ்.எஸ்.பி., எனப்படும் சசாஷ்திர சீமா பால் இசைக்குழுவினர் மட்டும் உள்ளே இருந்தனர்.


இதனால் கோபமடைந்த அவர் நுழைவாயிலுக்கு திரும்பி அங்கிருந்த ராஜ்பவன் அதிகாரிகளிடம் கோல்கட்டா போலீஸ் இசைக்குழுவை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கும் படி வலியுறுத்தினார். அதுவரை நான் ராஜ்பவனுக்குள் நுழைய மாட்டேன் என தெரிவித்தார்.


முதல்வர் மம்தாவின் தலையீட்டால் உடனடியாக போலீஸ் இசைக்குழுவை கவர்னர் மாளிகை அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர்.


இது குறித்து மம்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், “மேற்கு வங்க போலீஸ் இசைக்குழு கவர்னர் மாளிகையில் நிகழ்ச்சி நடத்துவது ஆண்டுதோறும் நடக்கும் ஒன்று. அவர்களுக்கு அனுமதி மறுத்தது தவறான செயல். சசாஷ்திர சீமா பால் இசை குழுவினர் நிகழ்ச்சி நடத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,” என்றார்.

Advertisement