சர்ச்சையை எழுப்பிய '2020 டில்லி' படம்; வெளியீட்டை நிறுத்த காங்., கோரிக்கை
புதுடில்லி: டில்லியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு 2020ல் நடந்த கலவரங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட '2020 டில்லி' திரைப்படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க தேர்தல் கமிஷனை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
டில்லியின் வடகிழக்கு பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த 2020ல் போராட்டம் நடந்தது. அப்போது, இரு சமூகங்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. பிப்.,23 - 26 வரை நடந்த கலவரம் மற்றும் போராட்டத்தில் வீடுகள், கடைகள் தீ வைக்கப்பட்டன; பல்வேறு தரப்பினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதில் 53 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து '2020 டில்லி' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இது, அடுத்த மாதம் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லி சட்டசபைக்கு பிப்., 5ம் தேதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த படத்தின் வெளியீட்டை நிறுத்தும்படி தேர்தல் கமிஷனை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக சிங்வி நேற்று கூறியதாவது:
சட்டசபை தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இது தற்செயலான நிகழ்வாக தெரியவில்லை.
இந்த படத்தை வெளியிட்டால், அது தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். ஓட்டு சதவீதத்தையும் பாதிக்கும். அதேசமயம், வாக்காளர்களை நேரடியாக பாதிக்கும். ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக பிரசாரங்கள் கிளம்பும். ஆகவே, இந்த படத்தின் வெளியீட்டை தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.
இந்த படத்தை தேர்தல் சமயத்தில் வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதிக்கும் என நம்புகிறோம். அதையும் மீறி வெளியிடப்படுவது தேர்தலின் நியாயத்தையும், வெளிப்படைத் தன்மையையும் குப்பைத் தொட்டியில் வீசுவதற்கு சமம்.
இந்த படத்தை வெளியிட்டு அரசியல் செய்யும் வேலையில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. 2019ல் பொது தேர்தலுக்கு முன்பாக, பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தை அக்கட்சி வெளியிட்டது. இப்போதும், அது போன்ற செயலில் ஈடுபட்டு சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த பா.ஜ., முயல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.