முருக பக்தர்களுக்கு தொடர்ந்து மன வேதனை: நடவடிக்கை எடுக்க  சிரவை ஆதினம் வலியுறுத்தல்

2

கோவை; ''தமிழகத்தில் தொடர்ந்து முருக பெருமானுக்கும், முருக பக்தர்களுக்கும் மன வேதனையை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என, சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் கூறியுள்ளார்.


அகில உலக முருக பக்தர் பேரவை தலைவர், கோவை சரவணம்பட்டி சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:


தமிழகத்தின் முதன்மை கடவுளாக முருகப்பெருமான் போற்றப்படுகிறார். நக்கீரர், அருணகிரிநாதர் போன்றவர்களால் அருளி செய்யப்பட்ட, திருமுருகாற்றுப்படை, திருப்புகழில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபடை வீடுகளில் முதன்மையான வீடான திருப்பரங்குன்றத்தில்,முருகப்பெருமான் வீற்றிருக்கும் மலையில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு உள்ளன.பல ஆண்டுகளாக வேற்று மதத்தினர் அங்கு வழிபாடு செய்து வந்தாலும், திடீரென சமீபத்தில் மாமிச உணவுகள் எடுத்துச் சென்று, அங்கு தயாரித்து பரிமாறுவது மனவலியை ஏற்படுத்தியுள்ளது.


இறை வழிபாடு என்பது பொதுவான ஒன்று. மற்றவர்களின் வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தக்கூடாது. திருப்பரங்குன்றம் மலைக் கோவிலை மீட்பதற்காக முருக பக்தர்கள் கூட்டமைப்பு மற்றும் ஹிந்து அமைப்புகள் ஒருங்கிணைந்து முயற்சி செய்வதை வரவேற்கிறேன்.


அங்கு குறிப்பிட்ட மதத்திற்கான வழிபாட்டு நெறிமுறைகள் இருக்கிறதா, இல்லையா என்பதை ஆய்வு செய்ய கோர்ட் முடிவு செய்ய வேண்டும்.


தமிழகத்தில் தொடர்ந்து முருக பெருமானுக்கும், முருக பக்தர்களுக்கும் மன வேதனையை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பழனி முருகப்பெருமானை தரிசிப்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச திருநாளில் பாதயாத்திரை மேற்கொள்வர். ஆங்காங்கே பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தை தரப்பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு வருத்தமளிக்கிறது. இந்த விஷயங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement