காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதிக்குழுவினர் உட்பட 13 பேர் பலி

கோமா : காங்கோவில் முக்கிய நகரத்தை கைப்பற்ற முயன்ற எம் - 23 கிளர்ச்சியாளர்கள் மற்றும் அந்நாட்டு ராணுவத்தினர் இடையிலான மோதலில், ஐ.நா.,வின் அமைதி காக்கும் குழுவினர் உட்பட 13 பேர் பலியாகினர்.

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், அந்நாட்டு ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் 25 ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நடந்து வருகிறது. அரசின் அதிகார மீறலை எதிர்த்து போரிடுவதாக கூறும் கிளர்ச்சியாளர்கள் குழுவில் ஒன்றான, எம் -23 குழு, அங்குள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

காங்கோ ராணுவத்தில் இருந்து வெளியேறி, தனி அமைப்பாக செயல்படும் எம் - 23க்கு, அண்டை நாடான ருவாண்டா மறைமுகமாக உதவுவதாக கூறப்படுகிறது. காங்கோ ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் தொடர்ந்து சண்டை நீடித்து வருகிறது.

காங்கோவுக்கு உதவும் விதமாக ஐ.நா.,வின் அமைதி காக்கும் குழு அங்கு முகாமிட்டுள்ளது. தென்னாப்ரிக்கா நாட்டு வீரர்கள் தலைமையிலான இந்த குழுவில், பிற வெளிநாட்டினரும் உள்ளனர்.

இந்நிலையில், காங்கோவின் கோமா நகரை கைப்பற்றும் முயற்சியில் எம் - 23 படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக சுற்றியுள்ள பகுதிகளில், தாக்குதல் நடத்திய இந்தக் குழு, தற்போது கோமா நகர எல்லையை முற்றுகையிட்டுள்ளனர். இவர்களை மேற்கொண்டு முன்னேறவிடாமல் தடுத்த காங்கோ ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

அவர்களுக்கு உதவியாக ஐ.நா., தரப்பில் அனுப்பப்பட்டுள்ள அமைதி காக்கும் குழுவைச் சேர்ந்த வீரர்களும் களத்தில் இறங்கினர். காங்கோ ராணுவம் மற்றும் எம் - 23 படையினர் இருவரும் மாறி மாறி குண்டு மழைகளை பொழிந்ததால், கோமா நகரத்தின் எல்லைகள் போர்க்களமாக மாறின. வெடிகுண்டு தாக்குதல்களில் போர் வாகனங்கள சேதமடைந்தன. இரண்டு தினங்களுக்கு மேலாக நீடித்த போரின் முடிவில், ஐ.நா., வின் அமைதி காக்கும் குழுவினர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் உட்பட 13 பேர் பலியாகினர்.

தென்னாப்ரிக்கா குழுவில் இடம்பெற்றிருந்த உருகுவே வீரர்களும் இந்த சண்டையில் உயிரிழந்தனர். இந்த தகவலை ஐ.நா., நேற்று உறுதி செய்தது. துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு மழையை சமாளிக்க முடியாமல், எல்லைகளில் வசித்த ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு உடைமைகளுடன் கோமா நகரின் மத்திய பகுதிக்கு செல்ல துவங்கியுள்ளனர். காங்கோ போரை நிறுத்தும் முயற்சியாக, இந்த விவகாரத்தில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இன்று பேச்சு நடத்தவுள்ளது.

Advertisement