ஆட்கொல்லி புலி உயிரிழந்த நிலையில் மீட்பு
திருவனந்தபுரம்: வயநாட்டில் ஆட்கொல்லி புலியை இன்று (ஜன.,27) சுட்டுக்கொல்ல மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால் வனத்துறையினர் காட்டிற்குள் நுழைந்த போது புலி மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மானந்தவாடியை சேர்ந்த ராதா என்பவர் காபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது புலி தாக்கியதில் உயிரிழந்தார். அந்த புலியை உயிருடனோ அல்லது சுட்டுப்பிடிக்கவோ நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டது.
பஞ்சரக்கொல்லியில் தலைமை வன கால்நடை அதிகாரி டாக்டர் அருண் சக்கரியா தலைமையிலான குழுவினர் முகாமிட்டுள்ளனர். பஞ்சரக்கொல்லியில் புலி நடமாடுவதை கண்காணித்த சிறப்பு மீட்பு குழு அதிகாரி ஜெயசூர்யா, அதன் மீது மயக்க மருந்து ஊசியை செலுத்தினார்.
அவர் புலி தாக்கியதில் பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதையடுத்து அந்த புலியை இன்று (ஜன.,27) சுட்டுக்கொல்ல மாநில அரசு உத்தரவிட்டது. மானந்தவாடியில், இன்று முதல் 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கால்நடை டாக்டர் அருண் சக்கரியா தலைமையிலான 30 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் இன்று வனத்துக்குள் செல்ல முடிவு செ ய்து இருந்தனர். அதன் படி இன்று காலை புலியை சுடுவதற்காக வனத்துறையினர் துப்பாக்கி உடன் காட்டிற்குள் நுழைந்தனர்.
அப்போது ஒரு அதிர்ச்சியை சம்பவம் காத்திருந்தது. வனத்துறை அதிகாரிகள் சற்றும் எதிர்பார்க்காத வகையில், ஆட்கொல்லி புலி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது. பின்னர் புலியின் சடலத்தை மீட்ட வனத்துறையினர் உயிரிழப்புக்கான காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்வதற்கு மாநில அரசு முதல்முறையாக உத்தரவிட்டிருந்த நிலையில், புலியின் மர்ம மரணம் வனத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.