மஹா கும்பமேளாவில் பிரமாண்ட சமையலறை; தினமும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம்

11


லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் மஹா கும்பமேளா நிகழ்ச்சியில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறையில் உணவுகள் தயாரித்து தினமும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில், இம்மாதம், 13ல் துவங்கிய மஹா கும்பமேளா, பிப்., 26ல் நிறைவடைகிறது. 45 நாட்களில், 45 கோடிக்கும் அதிகமான மக்கள் மஹா கும்பமேளாவில் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப் படுகிறது. நாடு முழுதும் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளா துவங்கியதில் இருந்து, நேற்று வரை, 11.47 கோடி பேர், புனித நீராடி உள்ளனர்.


வரும், ஜனவரி 29ம் தேதி, மவுனி அமாவாசை என்பதால், அன்று மட்டும் 10 கோடி பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம், 60,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மஹா கும்பத்தில் தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்களுக்கு உணவளிக்கும் வகையில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அன்னதானம் கமிட்டி அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்களிடம் நிறைய இயந்திரங்கள் மற்றும் ஆட்கள் வேலை செய்கிறார்கள். இங்கு 500க்கும் மேற்பட்டோர் உணவு சமைக்கிறார்கள்.

3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உணவு பரிமாறுகிறார்கள். எங்களிடம் 2000 கழிப்பறைகள், தண்ணீர் வசதிகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய குளியலறை உள்ளது. சமையலறையில் ஒரே நேரத்தில் 2,000 சப்பாத்திகளை தயாரிக்கும் திறன் கொண்ட மேம்பட்ட இயந்திரங்கள் பொருத்தப் பட்டுள்ளன. மேலும் அதிக அளவு காய்கறிகளை வெட்டுவதற்கான இயந்திரங்களும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement