எம்.எல்.ஏ., அலுவலகம் முன் துப்பாக்கிச்சூடு; முன்னாள் எம்.எல்.ஏ., கைது

1

ஹரித்வார் : உத்தரகண்ட்டில் எம்.எல்.ஏ., அலுவலகம் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ., பிரனவ் சாம்பியன் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஹரித்வார் சுயேட்சை எம்.எல்.ஏ., உமேஷ் குமாருக்கும், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., குன்வார் பிரனவ் சிங் சாம்பியனுக்கும் கடந்த சில தினங்களாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. அண்மையில் எம்.எல்.ஏ., உமேஷ் குமார் தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்து, குடும்பத்தினரை மிரட்டியதாக பிரனவ் சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.



தொடர்ந்து, நேற்று (ஜன.,26) தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டு உமேஷூன் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது, அங்கு துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டார். இதில், எம்.எல்.ஏ., அலுவலக ஊழியர் இம்ரான் என்பவர் காயமடைந்துள்ளார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.



இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீசார் வருவதற்கு முன்பு, பிரனவ் அங்கிருந்து கிளம்பிவிட்டார். எம்.எல்.ஏ.,வின் தனிச்செயலாளர் ஷூபைர் காஷ்மி போலீஸில் புகார் அளித்தார். பிரனவ் 100 முறைக்கு மேல் துப்பாக்கியால் சுட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.



இதைத் தொடர்ந்து, புகாரின் பேரில், பிரனவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல, பிரனவின் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்ததாக எம்.எல்.ஏ. உமேஷ் குமார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், பிரனவ் மற்றும் உமேஷ் குமாருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement