தினமலர் தலையங்கம்: விரைந்து கிடைத்த நீதி கயவர்களுக்கு எச்சரிக்கை!
கேரளாவில், கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலன் ஷாரோன் ராஜை கொன்ற வழக்கில், அவரின் காதலியான கிரீஷ்மாவுக்கு, அம்மாநில நீதிமன்றம் மரண தண்டனை விதித்து சமீபத்தில் தீர்ப்பளித்தது. அதேபோல, மேற்கு வங்கத்தில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் பயிற்சி பெண் டாக்டர், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து, அம்மாநிலத்தின் சியல்தா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களிலும், நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தண்டனை, கொலை மற்றும் பாலியல் பலாத்கார கயவர்களுக்கு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, படுகொலைக்கு ஆளான ஷாரோன் ராஜ் மற்றும் பெண் டாக்டரின் குடும்பத்திற்கும் நல்ல நீதி கிடைத்து ஆறுதல் தந்துள்ளது.
அதே நேரத்தில், 'மேற்கு வங்கத்தில் ஜூனியர் பெண் டாக்டர் கொல்லப்பட்ட வழக்கை, சி.பி.ஐ., முறையாக விசாரிக்க தவறி விட்டது. அவர்கள் சரியாக விசாரித்திருந்தால், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு துாக்கு தண்டனை கிடைத்திருக்கும். தற்போது விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை எனக்கு திருப்தி அளிக்கவில்லை' என, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது, மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் அரசியல் ரீதியாக, அவர் தெரிவித்துள்ள கருத்தாகும்.
ஆனாலும், இந்த வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்கப்பட்டது, பலருக்கும் ஆறுதல் தந்து உள்ளது. அதே நேரம், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் பணியாற்றுவோரின் பாதுகாப்பு என்பது இன்னும் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவசர நடவடிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டியது அவசியமாகும்.
கோல்கட்டா பெண் டாக்டர்
அரசு மருத்துவமனையின் பெண் டாக்டர், அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இந்த கொடூர சம்பவம், நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கியதோடு, இந்த வழக்கை விசாரிப்பதில், கோல்கட்டா போலீசார் ஆரம்பத்தில் காட்டிய அலட்சியம், மேற்கு வங்க மாநில மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால், தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை மறந்து, பல்வேறு அரசியல் கட்சியினரும், இந்த படுகொலைக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்தும் சூழ்நிலையும் உருவானது.
அதனால் தான், இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு, கோல்கட்டா நீதிமன்றம் பரிந்துரைக்கும் சூழ்நிலையும் உருவானது. இருப்பினும், இந்த வழக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இறுதியானதல்ல. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.
அந்த மேல்முறையீட்டிலும், தற்போதைய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால், படுகொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைத்ததாக கருதலாம்; நீதி கிடைக்கும் என்றும் நம்பலாம்.பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, மருத்துவ நிறுவனங்களில் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக, நிபுணர் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்து, பரிந்துரைகள் வழங்கும்படி கூறியது. அந்தக் குழு விசாரணை நடத்தியும், கருத்துக்கள் கேட்டும் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.
அந்த பரிந்துரைகளை, மத்திய, மாநில அரசுகள் விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். அப்போது தான், நாட்டில் உள்ள எந்த மருத்துவ நிறுவனத்திலும், கோல்கட்டாவில் நடந்தது போன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க முடியும். எது எப்படியோ, இரண்டு படுபாதகமான கொலை சம்பவங்களில், கடுமையான தீர்ப்புகளை விரைவாக வழங்கிய நீதிமன்றங்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த அரசு நிர்வாகத்தையும் பாராட்டலாம்.