மாதவிக்கு பதவி நீட்டிப்பு இல்லை; செபி அமைப்பு தலைவர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

5


புதுடில்லி: செபி அமைப்பின் தற்போதைய தலைவர் மாதவிக்கு பதவி நீட்டிப்பு இல்லை. செபி தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியின் தலைவராக மாதவி புரி இருந்து வருகிறார். கடந்த 1989ம் ஆண்டு ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் தனது பணியை தொடங்கிய மாதவி கார்ப்பரேட் பைனான்ஸ், பிராண்டிங், நிதிப்பிரிவு, கடன் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றி உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் பிப்ரவரி 28ம் தேதியுடன் முடிவடைகிறது.


இவர் தன் பதவியை பயன்படுத்தி ஊழல் செய்வதாக சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். அதானி முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தவில்லை என்றும் மாதவி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டி இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், செபி தலைவர் பதவி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தேர்ந்தெடுக்கப்படும் நபர் 5 ஆண்டுகளுக்கு 'செபி' தலைவராக செயல்படுவார் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தற்போதைய தலைவர் மாதவிக்கு பதவி நீட்டிப்பு இல்லை என்பது உறுதி ஆகி உள்ளது. செபி அமைப்பில் இதற்கு முன் தலைவராக இருந்த பலரும் பதவி நீட்டிப்பு பெற்றுள்ள நிலையில், மாதவிக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

செபி என்பது இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம். இந்த அமைப்பின் வேலை, இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவது ஆகும். மும்பையில் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு 1988ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு தான் தற்போது தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement