யு.ஜி.சி., புதிய விதிகளை திரும்பப்பெறணும்: மத்திய அரசுக்கு கோவி செழியன் வலியுறுத்தல்
சென்னை: யு.ஜி.சி.,யின் புதிய விதிகளை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த ஜன.6ம் தேதி வெளியான யு.ஜி.சி., வரைவு நெறிமுறைகள் மாநில உரிமைகளை பறிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் குற்றம் சாட்டினார். அவரது பேட்டி:
மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் யு.ஜி.சி.,யின் புதிய விதிமுறைகள் உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே கல்வித்துறையில் முழு உரிமை உள்ளது.
யு.ஜி.சி., மூலம் மாநில பல்கலைக்கழகங்களை மத்திய அரசு கைப்பற்ற முயற்சிக்கிறது. அடிப்படை கல்வி முதல் உயர் கல்வி வரை பல்வேறு இடைஞ்சல்களை மத்திய அரசு கொடுக்கிறது. யு.ஜி.சி., புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும்.
மாநில அரசால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அந்த மாநில மாணவர்களுடைய கல்வி சார்ந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக தான் இதுவரை செயல்பட்டு கொண்டு வந்திருக்கிறது. அதை தடுப்பதற்காக தான் பல்கலைக்கழகங்களை யுஜிசி மூலம் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள்.
'நாங்கள் சொன்னதை நீங்கள் செய்ய வேண்டும்' என்று திணிக்கக் கூடிய கருத்ததாகத்தான் யு.ஜி.சி., யின் வரைவு இருக்கிறது. ஆகவே யு.ஜி.சி.,யின் புதிய விதிகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு கோவி. செழியன் கூறினார்.