தோல் தொழிற்சாலை கழிவுநீரை பாலாற்றில் விட்டால் திஹார் சிறை!

6

புதுடில்லி: 'தோல் பதனிடும் தொழிற்சாலைகள், பாலாற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கொட்டுவதால் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் வாழ்க்கை நாசமாகி விட்டது. இனி விதிமுறைகளை மீறும் ஆலை உரிமையாளர்கள் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்படுவர்' என, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வேலுார் பாலாற்றில் அதை சுற்றி இருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதாகவும், மாசு ஏற்படுத்தும் இத்தகைய தொழிற்சாலைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் வேலுார் சுற்றுசூழல் கண்காணிப்பு குழு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்த நிலையில், நேற்று விரிவான தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:

பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் எந்த தங்கு தடையும் இல்லாமல் கழிவுகளை கலக்கின்றன. இதனால், பாலாறுடன் சேர்ந்து சுற்றுச்சூழலும் பாதிப்படைந்துள்ளது. ஆற்று நீரை பயன்படுத்தும் விவசாயிகளும், பொதுமக்களும் மற்றும் அந்த நீரை குடிக்கும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

வேலுார் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட மாசு காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது.

அந்த உத்தரவை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் குழு அமைத்து, பாலாற்று பகுதிகளில் ஏற்படும் மாசை கண்காணிக்க வேண்டும்.

மேலும் சுற்றுச்சூழல் மாசையும், பாலாறு மாசடைவதையும் தடுக்க உரிய பரிந்துரைகளையும் தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும்.

கடுமையான கேடு விளைவிக்கும் இந்த செயல்பாடுகளை தடுக்க, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் முதன்மை நோக்கம். குறிப்பாக தோல் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தபோது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் விதிமுறைகளை தோல் பதனிடும் தொழிற்சாலைகள் சரியாக பின்பற்றவில்லை என்பது தெரிகிறது.

இதனால் அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரது வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும்.

இந்த இழப்பீட்டுத் தொகையை, பாதிப்பை ஏற்படுத்தும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளிடம் இருந்து வசூல் செய்து தமிழக அரசு வழங்க வேண்டும்.

மேலும், நாங்கள் தற்போது பிறப்பித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் விதிமுறைகளை முறையாக பின்பற்றி தொழிற்சாலைகள் செயல்பட வேண்டும்.

விதிகளை மீறும் தொழிற்சாலை உரிமையாளர்களை டில்லி திஹார் சிறையில் அடைப்போம் என எச்சரிக்கை விடுக்கிறோம். இந்த வழக்கின் அடுத்தடுத்த நகர்வுகளை கண்காணிப்பதற்காக விசாரணை, நான்கு மாதங்களுக்குப் பின் மீண்டும் பட்டியலிடப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.

Advertisement