யமுனை நீரில் அதிக அமோனியா; ஹரியானா அரசு சதி: கெஜ்ரிவால் விளக்கம்!


புதுடில்லி: யமுனை நீரில் ஹரியானா பா.ஜ., அரசு விஷம் கலப்பதாக கூறிய புகார் பற்றி, டில்லியில் தேர்தல் கமிஷனிடம் முழுவிளக்கத்தையும் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்தார்.

ஹரியானாவில், முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள யமுனை நதியில் இருந்து வரும் தண்ணீர், டில்லி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. கூடுதலாக உ.பி.,யில் இருந்தும் டில்லிக்கு குடிநீர் வருகிறது.

இந்நிலையில், ஹரியானா அரசு யமுனை நதியில் விஷத்தை கலப்பதாக டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகீர் குற்றச்சாட்டை சுமத்தினார். விஷம் கலந்த தண்ணீரை குடிப்பதால், டில்லி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, ஆம் ஆத்மி அரசு மீது பழி சுமத்த பா.ஜ., சதி செய்வதாகவும் கெஜ்ரிவால் கூறினார்.


யமுனையில் எவ்வாறு விஷம் கலக்கப்பட்டது, அதன் அளவு, தன்மை, அதை கண்டுபிடித்த பொறியாளர்களின் விபரங்கள், எங்கு சோதனை நடத்தப்பட்டது, விஷத்தைக் கண்டறியும் முறை உள்ளிட்ட விபரங்களை உரிய ஆதாரங்களுடன் இன்று காலை 11:00 மணிக்குள் கெஜ்ரிவால் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.


இந்நிலையில், இன்று (ஜன.,31) டில்லிக்கு வழங்கும் யமுனை நீரில், ஹரியானா பா.ஜ., அரசு விஷம் கலப்பதாக கூறிய புகார் பற்றி, தேர்தல் கமிஷனில் கெஜ்ரிவால் விளக்கம் அளித்தார். டில்லி தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு, கெஜ்ரிவாலுடன் டில்லி முதல்வர் அதிஷி மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடன் வந்தனர்.


இது குறித்து கெஜ்ரிவால் கூறியதாவது: டில்லிக்கு வழங்கும் யமுனை நீரில் அமோனியா அளவு அதிகமாக இருக்கிறது. டில்லி மக்களின் உடல்நலம், பாதுகாப்பு மட்டுமே எனக்கு கவலை அளிக்கிறது. டில்லி தேர்தலில் ஹரியானா அரசு செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது.

யமுனை நதி நீரில் அம்மோனியா அளவை அதிகரிக்க பா.ஜ., தலைமையிலான ஹரியானா அரசு சதி செய்தது தெளிவாகிறது. யமுனையில் அம்மோனியா அளவு அதிகரிக்கத் தொடங்கியதை டிசம்பரில் அதிஷி கவனித்தார். இதனை டில்லி நீர்வளத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.இவ்வாறு அவர் கூறினார். கெஜ்ரிவால் எழுத்துபூர்வமாக அளித்த பதிலை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டது.

Advertisement