சஸ்பெண்ட் உத்தரவு ரத்துகாத்திருப்பு போராட்டம் வாபஸ்


சஸ்பெண்ட் உத்தரவு ரத்துகாத்திருப்பு போராட்டம் வாபஸ்


நாமக்கல்:வி.ஏ.ஓ.,க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இரண்டு நாட்களாக நடந்து வந்த மாவட்ட வி.ஏ.ஓ.,க்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், கொண்டமநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கரடு புறம்போக்கில், அனுமதியின்றி கல் குவாரி இயங்கி வந்தது.
இதுகுறித்து, முன்கூட்டியே அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறி, கொண்டமநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ., ஜான்பாஸ்கோ, விட்டமநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ., கோகிலா ஆகிய இருவரையும், நாமக்கல் ஆர்.டி.ஓ., பார்த்தீபன், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதனால், மாவட்ட வி.ஏ.ஓ.,க்கள், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி, கடந்த, 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேற்று ஆர்.டி.ஓ., முன்னிலையில், வி.ஏ.ஓ., மற்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து, வி.ஏ.ஓ.,க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், கொண்டமநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ., ஜான்பாஸ்கோ அக்கியம்பட்டிக்கு மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றிய சரவணன், கொண்டமநாயக்கன்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
விட்டமநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ., கோகிலா, அதே கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்ற அனுமதிக்கப்பட்டார். அதற்கான உத்தரவை, ஆர்.டி.ஓ., பார்த்தீபன் வெளியிட்டார். வி.ஏ.ஓ.,க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இரண்டு நாட்களாக நடந்த காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, வி.ஏ.ஓ.,க்கள் பணிக்கு திரும்பினர்.

Advertisement