கோடையில் கோரை பாய் பயன்பாடு தேவை: சித்த மருத்துவர் அறிவுரை


கோடையில் கோரை பாய் பயன்பாடு தேவை: சித்த மருத்துவர் அறிவுரை


கரூர்:கோடை காலத்தில், கோரை பாயை பயன்படுத்தினால், உடலுக்கு பல வகையில் நன்மை ஏற்படும் என, சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று கரை பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோரை சாகுபடி செய்யப்படுகிறது. இதில், தயாரிக்கப்படும் பாய், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். கரூர் மாவட்டத்தில் செவிந்திப்பாளையம், அச்சமாபுரம், கடம்பங்குறிச்சி, நெரூர் உள்ளிட்ட பகுதிகளில், 20 ஆண்டுகளுக்கு முன், 150க்கும் மேற்பட்ட தறிகளில் கோரைப்பாய் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, 25க்கும் குறைவான தறிகளில் கோரை பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. பல டிசைன்களில் பிளாஸ்டிக் பாய் விற்பனைக்கு வந்து விட்டதால், வெளிர் மஞ்சள் நிறமுடைய கோரைப்பாய்க்கு மவுசு குறைந்து விட்டது.இதுகுறித்து, ஓய்வு பெற்ற மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் கூறியதாவது: பித்தம், வாதம், கபம் ஆகியவை உடலில் அதிகரிப்பதால், பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. குறிப்பாக, உடல் சூட்டால் ஏற்படும் நோயால், பெரும்பான்மையான மக்கள் அவதிப்படுகின்றனர். வரும் மூன்று மாதங்கள், கோடை காலமாகும். அப்போது, உடலுக்கு குளிர்ச்சி தேவை. இதனால், குளிர்ச்சியான உணவு பொருட்களை சாப்பிடலாம்.
குறிப்பாக, இயற்கையான முறையில் கோரை புல் மூலம் தயாரிக்கப்படும், பாய்களை பயன்படுத்தலாம். இதனால், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், நல்ல துாக்கம் வரும்; உடல் சோர்வு இருக்காது. இயற்கை அளித்துள்ள கொடையான, கோரை பாயை கோடை காலத்தில் பயன்படுத்தினால், உடல் சூட்டில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
இவ்வாறு கூறினார்.

Advertisement