பள்ளி கிளைகளை துவக்க சி.பி.எஸ்.இ., அனுமதி

புதுடில்லி:சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன், பள்ளிகள் கிளைகளை துவக்குவதற்கு, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் அனுமதி அளித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., வாரியத்தின் கீழ் தற்போது செயல்படும் பள்ளிகள், கிளைகளை துவக்குவதற்கு அனுமதி கிடையாது. ஒரு குழுமத்தின் கீழ் இருந்தாலும், ஒவ்வொரு பள்ளியும் தனித்தனி பள்ளிகளாகவே பார்க்கப்படுகிறது. அவற்றுக்கென தனி அங்கீகார எண்கள் வழங்கப்படும். இந்நிலையில், ஒரே பெயரில் பள்ளிகள், கிளைகளை துவக்குவதற்கு, சி.பி.எஸ்.இ., தற்போது அனுமதி அளித்துள்ளது. இது குறித்து, சி.பி.எஸ்.இ., செயலர் ஹிமான்ஷு குப்தா கூறியுள்ளதாவது:

ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், கிளை பள்ளிகளை நடத்தலாம். அதே நேரத்தில் முக்கிய பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளும், கிளைகளில் நர்சரி முதல் 5ம் வகுப்பு வரையிலான வகுப்புகளையும் நடத்தலாம்.

கிளைப் பள்ளியில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு, முக்கிய பள்ளியில் அடுத்த வகுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும்; அதை தனி அட்மிஷனாக கருதக் கூடாது.

நிர்வாகம் மற்றும் கல்வி தொடர்பாக பொதுவான நடைமுறைகள் இருக்கலாம். ஆனால், இரண்டு பள்ளிகளுக்கும், தனித்தனி கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் இருக்க வேண்டும். கிளை பள்ளியின் ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, முக்கிய பள்ளியில் இருந்து வழங்கலாம். இரண்டு பள்ளிகளுக்கும் பொதுவாக கணக்கு வழக்குகளை கடைப்பிடிக்கலாம்.

பள்ளியின் கட்டமைப்பு வசதி, மாணவர் பாதுகாப்பு, தேவையான ஆசிரியர்கள் ஆகியவை, தனித்தனியாகவே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement