ஈரோட்டில் தயார் நிலையில் பொதுத்தேர்வு வினாத்தாள்



ஈரோட்டில் தயார் நிலையில் பொதுத்தேர்வு வினாத்தாள்


ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் 3 துவங்கி, 23 வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 5 துவங்கி 25 வரை நடக்கிறது. இரு பொதுத்தேர்வுகளையும் மாவட்டத்தில் 47,354 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர். மாவட்டத்தில், 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்கள், அரசு தேர்வு துறை சார்பில் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் ஈரோடு மாவட்டத்திற்கு வந்தடைந்தது. இதை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, ஈரோடு, கோபி, அந்தியூர், தாளவாடி ஆகிய இடங்களில் உள்ள கட்டு காப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அந்த அறையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு, காந்திஜி சாலை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கட்டு காப்பு மையத்தில், பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது. வினாத்தாள் அறையின் முன், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement