மர்ம விலங்கு நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை அறிவிப்பு


மர்ம விலங்கு நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை அறிவிப்பு


சென்னிமலை:சென்னிமலை அருகே, ஆட்டுப்பட்டிக்குள் மர்ம விலங்கு புகுந்து, இரு ஆடுகளை கொன்றதால், வனத்துறை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னிமலை அருகே சில்லாங்காட்டுவலசு குட்டக்காட்டை சேர்ந்தவர் குமாரசாமி, 58, விவசாயி. இவர், தெற்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது தோட்டத்தில் பட்டி அமைத்து, 20-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். கடந்தாண்டு தொடர்ச்சியாக எட்டு ஆடுகள் காணாமல் போனது. அப்போது, பட்டியின் அருகில் வனவிலங்கு ஒன்றின் கால் தடயம் பல இடங்களில் ஆழமாக பதிந்திருந்தது. அதை சிறுத்தையின் கால் தடயத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது அதேபோல் இருந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு, குமாரசாமி பட்டியில் புகுந்த மர்ம விலங்கு ஒரு ஆட்டை கடித்து தின்றும், ஒரு ஆட்டை துாக்கி சென்றும் உள்ளது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் கால் தடத்தை பார்வையிட்டனர். அது சிறுத்தை போன்று மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளது உறுதியானது. இதையடுத்து, மலை அடிவார பகுதியை சார்ந்துள்ள வெப்பிலி கிராம எல்லையில் உள்ள மக்கள் வன எல்லை ஓரமாக ஆடு, மாடு கொட்டகை அமைக்க வேண்டாம் என சென்னிமலை வனக்குழு தலைவர் துரைசாமி, வனகாப்பாளர் முருகன் ஆகியோர் நேற்று துண்டறிக்கை கொடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement